குஜராத், காந்தி நகரில் இயங்கும் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம், பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியுடன் இணைந்து, கல்லூரி வளாகத்தில் நடத்தும் 3 நாள் பிளாஸ்மா கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவில் பி.எஸ்.ஜி.ஆர் கல்வி நிறுவனத்தின் தலைவர் நந்தினி, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வலுப்படுத்தவும், மேம்பட்ட அறிவியல் கோட்பாடுகளைப் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளச் செய்யவும், பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் நாடு முழுவதும் விழிப்புணர்வுத் திட்டங்களை நடத்தி வருகிறது.
செயல்விளக்கங்கள் மூலம் பிளாஸ்மா நிகழ்வுகளை மாணவர்கள் கண்கூடாகக் காண முடியும்.
ஐபிஆர் நிபுணர்களின் பிளாஸ்மா ஆராய்ச்சி, அணுக்கரு இணைவு ஆற்றல் மற்றும் அதிநவீன அறிவியல் முன்னேற்றங்கள் குறித்த சிறப்புரைகள் இடம்பெறுகின்றன.
மேலும், அறிவியல் வினாடி-வினாக்கள் மற்றும் கல்வி சார்ந்த விளையாட்டுகளும் இடம்பெற்றன.

அறிவியல் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், அடுத்த தலைமுறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியை பார்வையிட தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
கண்காட்சியானது தினசரி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும் என்று போட்டியை ஒருங்கிணைக்கும் கல்லூரியின் இயற்பியல் துறை தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி.ஆர் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாரதி, பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
