கோவை மாநகரில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், மாநகருக்குள்  கனரக வாகனங்கள் நுழைவதற்கான நேரக் கட்டுப்பாட்டில், கோவை மாநகர காவல்துறை மாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாநகரத்தில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்கள் மாநகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போதுள்ள மக்கள் தொகை மற்றும் வாகன பெருக்கத்தால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி சாலை விபத்துக்கள் நிகழ்ந்து, அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இதனால் கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவுப்படி மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட நேரத்தை காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் மாற்றியமைக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதற்கு கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.