கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை முன்னுரிமையுடன் பரிசீலித்து, விரைவாகச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என் மாநிலங்களவை தேமுதிக உறுப்பினா் எல்.கே.சுதீஷ், மத்திய அமைச்சர் மனோஹர் லாலை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடர்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியுள்ளதாவது: 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 21 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கோவை கொண்டுள்ளது.
ஜவுளி, பொறியியல், பம்புகள் மற்றும் மோட்டார்கள், வாகன உதிரிபாகங்கள், உற்பத்தித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் கோவை வலுவான தொழில் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. புகர்ப் பகுதிகளின் விரிவாக்கம், வேலைவாய்ப்பு பெருக்கம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்வால் அங்குப் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் அதிகரித்துள்ளன.
இதேபோல, மதுரை 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 14.66 லட்சம் மக்கள்தொகையை கொண்டுள்ளது. இந்த நகரில் மீனாட்சி அம்மன் கோயில், வரலாற்றுச் சின்னங்கள், சுற்றுலா தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக மையங்கள் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் மக்கள்தொகையை கொண்டுள்ளது.
இந்த இரு நகரங்களிலும் நிலவும் சாலைப் போக்குவரத்து அமைப்புகள், அவற்றின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையை எட்டியுள்ளன. விரைவான நகரமயமாக்கல், தனியார் வாகனங்களின் பெருக்கம், காற்று மாசுபாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும், நம்பகமான மற்றும் நீடித்த அதிவேக வெகுஜன போக்குவரத்து அமைப்பான மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமாக மாறியுள்ளது.
எனவே, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து அவற்றுக்குத் தேவையான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஒப்புதல்களை விரைந்து வழங்க வேண்டும்.
