டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை இளங்கோவடிகள் தமிழ் மன்றத்தின் சார்பாக ‘தமிழ்ப் பெருமிதம்’ எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

தமிழ்த்துறைத் தலைவர் குப்புச்சாமி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சாம்கிதியோன் பேசுகையில்: தமிழ்ப் பெருமிதம் என்பது தமிழ் மொழியின் பெருமைகளைப் பேசுவது மட்டுமல்ல, தமிழனின் தொன்மையையும், சிறப்பையும், நாகரிகத்தையும் அறிந்து கொள்வது தான் தமிழின் பெருமிதமாகும்.

திரைகடல் ஓடி திரவியம் தேடு என்ற வாக்கிற்கேற்ப தமிழன் கடல் வழியாக மட்டுமல்லாமல் நில வழியாகவும் வாணிகத்தையும், பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும் பரவச்செய்தனர். மாணவர்கள் வெறும் பாடப் புத்தகங்களை மட்டும் படித்தால் மட்டும் போதாது. அறிவு சார்ந்த புத்தகங்களை  தேடி வாசிக்க வேண்டும். அப்போதுதான் சிந்தனை மற்றும் அறிவு வளரும் என்று பேசினார்.

நிகழ்வில் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், இளங்கலை முதலாமாண்டு மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.