சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளால் உருவாக்கப்பட்ட நாப்கின் எரிப்பு இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது.
இது கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் கல்லூரி சார்பில் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் கூறியதாவது :-
“பெண்களின் மாதவிடாய்கால சுகாதாரத்திற்கு உதவும் வகையிலும் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை சுகாதாரமான முறையில் அகற்றும் வகையில், இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் முற்றிலும் சூரிய சக்தியில் இயங்குவதால் மின்சாரம் தேவைப்படுவதில்லை என்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் பங்களிக்கிறது.”
“பெண்களின் சுகாதாரத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கழிவு மேலாண்மையிலும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியமானது. எனவே, மாணவிகள் இது போன்ற திட்டங்களை உருவாக்க முன் வரவேண்டும். மேலும், பெண்களின் உடல்நலம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மைக்கு உதவும் வகையில், இந்த கல்லூரி மாணவிகள் உருவாக்கிய இந்த கண்டுபிடிப்புக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் சித்ரா, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

