உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதற்குத் தேவையான உயர் திறன் மெமரி சிப்புகளின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் தற்போது ஸ்மார்ட்போன் சந்தையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
ஏஐ சேவைகளை இயக்கும் டேட்டா சென்டர்கள், குறிப்பாக உயர் வேக DRAM மற்றும் HBM (High Bandwidth Memory) போன்ற மெமரி சிப்புகளை மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்து வருகின்றன. இதனால் ஸ்மார்ட்போன்களுக்குப் பயன்படுத்தப்படும் மெமரி சிப்புகளின் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமையின் காரணமாக, சில ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி திட்டங்களை மாற்றியமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஷாவோமி, ஒப்போ, விவோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாக, இந்தியா உள்ளிட்ட பல சந்தைகளில் கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட்போன்களின் விலை சராசரியாக 10-15% வரை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
மெமரி சிப் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுவதால், சில நிறுவனங்கள் அதிக சேமிப்பு திறன் கொண்ட மாடல்களின் வெளியீட்டை குறைப்பது, முந்தைய தலைமுறை மெமரி சிப்புகளை பயன்படுத்துவது, அல்லது சில அம்சங்களில் செலவைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மறுபுறம், சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மெமரி சிப்புகளைத் தாங்களே தயாரிக்கும் திறன் கொண்டிருப்பதால், இந்த விநியோக நெருக்கடியின் தாக்கத்தை ஒப்பீட்டளவில் குறைவாகவே சந்தித்து வருகின்றன.
சந்தை ஆய்வு நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, ஏஐ துறையில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மெமரி சிப் விநியோக தட்டுப்பாடு 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும். இதனால் ஸ்மார்ட்போன் விலைகள் குறுகிய காலத்தில் கணிசமாக குறையும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
