கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் இஸ்ரோ விஞ்ஞானி பிரபுவுக்கு பாராட்டு விழா இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரபு, மாணவர்களுடன் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பான விவரங்களை பகிர்ந்து, அவர்களின் கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தார். வானவியல் தொழில்நுட்பத் துறையில் மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை எடுத்துக்கூறினார். இந்த தொழில்நுட்பத்தின் மூலம், இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பெற்றிருப்பதை பெருமையுடன் தெரிவித்தார்.

மேலும், டிஆர்டிஓ, இஸ்ரோ போன்ற அரசுத் துறைகளில் பணியாற்ற, கேட் மதிப்பெண்களின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு விளக்கினார்.

விழாவில், கல்லூரி டீன் மகுடீஸ்வரன், சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.