ஈஷா ஆதியோகி வளாகத்தில் கடந்த 12 நாட்களாக நடைபெற்ற ‘தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா’ மக்கள் பெரும் வரவேற்புடன் நிறைவு பெற்றது. பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமிழ் பண்பாட்டின் பெருமைகளை அனுபவித்தனர்.
தமிழ் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் வகையில், 150-க்கும் மேற்பட்ட கண்காட்சிகள், விற்பனை அரங்குகள் மற்றும் இலவச கலைப் பயிற்சி பட்டறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், தஞ்சாவூர் ஓவியம், சுவாமிமலை ஐம்பொன் சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், மகாபலிபுரம் கற்சிற்பம் உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.
நாட்டுப்புறக் கலைகள், சிலம்பம், பறையிசை, கவிதை, ஓவியம், கோலம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் முறையாக நடத்தப்பட்ட பறையிசை போட்டியில் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி கலைக் குழு முதல் பரிசை வென்றது.
பறையிசைப் போட்டியில் நடுவராக இருந்த பனையூர் ராஜா, “பறை இசைக்கென தனியாக போட்டி நடத்தப்பட்டதன் மூலம், பறை இசைக்கலைஞர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் பெருமையானது” என்று தெரிவித்தார்.
தினந்தோறும் மாலை நேரத்தில் குச்சி ஆட்டம், சிலம்பம், தேவராட்டம், கரகம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு, பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.