இந்தியாவில் உள்ள 85%க்கும் மேலான வீடுகளில் ஸ்மார்ட்போன்கள் உள்ளன என இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
நமது நாட்டில் உள்ள 60 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களில் 92.79% கருவிகள் ஆண்ட்ராய்ட் மென்பொருளில் இயங்கக்கூடியவை. வெறும் 7.15% மட்டுமே ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மென்பொருளில் இயங்குகிறது.

இந்த நிலையில், வெகுஜன மக்கள் இன்று இனைய உலகத்திற்க்குள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் மூலம் பயணித்து, தங்களின் தேவைகளை தங்களாகேவே பூர்த்தி செய்துகொள்கின்றனர். இப்படி இருக்க, தமிழக அரசின் மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ ஆண்ட்ராய்டு செயலி இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளதால் அந்த செயலி மூலம் தகவல்களை பெற மக்கள் திணறுகின்றனர்.
2026 வெளிவந்த ஆண்ட்ராய்டு 16 பதிப்பை கொண்ட யாருக்கும் இந்த செயலி இயங்கவில்லை. இந்த செயலியை முறையாக பதிவிறக்கம் செய்ய கூகிள் பிளே ஸ்டோர் மூலம் முயற்சித்தபோது இது கடைசியாக 2025 ஜூலை மாதத்தில் புதுப்பிக்கப்பட்டது தெரியவந்தது.

ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த செயலியை புதுப்பிக்காத சம்மந்தப்பட்ட மின் வாரிய பிரிவினர், ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் மட்டும் புதுப்பிப்பு பணிகளை செய்துள்ளனர். இந்த தகவல் அந்த செயலியின் பதிவிறக்கபக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் பலரும் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு வகை செயலியை புதுப்பிக்காமல் ஆப்பிள் நிறுவனத்தின் செயலியை புதுப்பித்தது ஏன்? உயர் அதிகாரிகள் எப்படியும் ஆப்பிள் ஐபோனை தான் பயன்படுத்துவார்கள் எனவே அதற்கு முக்கியத்துவம் தரலாம் என்றா? எனும் விமர்சனங்கள் எழும் முன்னர் இதை உடனே சரிசெய்ய அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் மாதாந்திர மின் தடை ஏற்படும் இடங்கள் விவரங்களும் சரிவர பதியப்படுவது இல்லை. பொதுமக்கள் மாதாந்திர மின்வெட்டு தொடர்பான முக்கிய விவரங்களை தெரிந்துகொள்ள உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளத்தில் கோவை தெற்கு மண்டல பகுதிகளுக்கான திட்டமிடப்பட்டுள்ள மின் வெட்டு பற்றிய தகவல் கடந்த ஒன்றரை மாதங்களாக சரியே பதிவிடப்படுவது இல்லை. இப்போது கோவை வடக்கு பகுதிகளுக்குமான மாதாந்திர திட்டமிடப்பட்டுள்ள மின் வெட்டு பற்றிய விவரங்கள் இந்த இணையத்தளத்தில் கிடைப்பதில்லை.
பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளுக்கான இணையதளமோ, செயலியோ, ஏன் தொலைபேசி எண்ணாக இருந்தாலும் அதன் முறையான, பழுதில்ல இயக்கம் பற்றி ஆராய்ந்து, தீர்வுகளை வழங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. இதை நிறைவேற்றுமா நமது அரசு?
