கோவை சிங்காநல்லூர் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் தினமும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இங்கு மேம்பாலம் கட்ட 2022ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.110 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அதற்கு மத்திய அரசு 2022ல் ஒப்புதலும்  வழங்கியது.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் வர உள்ளதால் இந்த மேம்பாலம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் முதல் கட்ட மெட்ரோ திட்டத்தில் திருச்சி சாலை வழித்தடத்தில் மெட்ரோ அமையவில்லை என கூறப்பட்டது.

கால தாமதத்தினால் முன்பு தயாரிக்கப்பட்ட ரூ.110 கோடி திட்ட மதிப்பீட்டில் டெண்டர் எடுக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் நீண்ட காலமாக மேம்பாலம் திட்டம் நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் தற்போது மேம்பாலம் திட்டம் முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு, மேம்பாலம் கட்டுமானத்தைத் தொடங்க ஒப்புதல் மற்றும் நிதி கோரி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் ரூ.180 கோடி திருத்தப்பட்ட மதிப்பீட்டை சமர்ப்பித்துள்ளது. உழவர் சந்தையில் இருந்து தொடங்கி ஜெய் சாந்தி தியேட்டர் வரை 2.4 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மேம்பாலம் அமையும்.

இந்த திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கான இறுதி ஒப்புதல், நிதி கிடைத்தவுடன் தாமதமின்றி பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.