கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் கேரளாவுக்கு ரயில்களில் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 500 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரயில்கள் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் வகையில், கோவை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி பாதுகாப்பு ஆணையர் சந்திர மோகன் உத்தரவின் பேரில், போத்தனூர் ரயில் நிலையத்தில் சிறப்பு சோதனை நடைபெற்றது.

போத்தனூர் RPF ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்புப் படையினர், இன்று காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை பல்வேறு ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரயில்களின் முன்பக்க பொதுப் பெட்டிகளில் இருக்கைகளுக்கு அடியிலும், பல்வேறு பகுதிகளிலும் உரிமை கோரப்படாமல் வைக்கப்பட்டிருந்த 35 மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை சோதனை செய்தபோது, சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இந்த மூட்டைகள் குறித்து பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டபோதும், யாரும் உரிமை கோர முன்வரவில்லை. இதையடுத்து 35 மூட்டைகளையும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி, மேல்நடவடிக்கைக்காக கோவை குடிமைப்பொருள் வழங்கல் துறையின் பறக்கும் படை சிறப்பு வட்டாட்சியரிடம் மதியம் 12.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது.