நடிகர் விஜய் சேதுபதிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜாக்பாட் அடிக்கும் என்று என்று கூறி இருந்தேன். தற்பொழுது அவருக்கு நேரம் சரியில்லை என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம் பகுதியில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவையை எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் மீண்டும் துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்து பொதுமக்கள் மத்தியிலும், பள்ளி மாணவர்கள் மத்தியிலும் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: கொரோனாவிற்கு முன்பு இப்பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் துவக்கி வைத்துள்ளதாகவும் ஏன் சேவை நிறுத்தப்பட்டது என்பது குறித்து முந்தைய ஆட்சியாளர்களிடம் தான் கேட்க வேண்டும் அவர்கள் மக்களின் குறைகளை பார்க்கவில்லை.
நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்வர் விஜயை பற்றி விமர்சித்ததாக கருத்துக்கள் பரவி வருவது தொடர்பான கேள்விக்கு, பிக் பாஸ் என்பது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. ஜனநாயக நாட்டில் அரசியல் விமர்சனம் செய்வதற்கான கருத்துரிமை அனைவருக்கும் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்
நடிகர் விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படம் நடிப்பதற்கு முன்பு அவருடைய நிலை எவ்வாறு உள்ளது என்பதை கட்டங்கள் பார்த்து கூறி இருந்தேன். அப்பொழுது அவருக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது என்று கூறி இருந்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு ஜாக்பாட் ஆக இருந்தது. இந்த நூறு நாளில் சுமார் 80 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவார். எனவே சம்பளத்திற்காக அவர் பேசியிருக்கிறார்.
அந்த தொலைக்காட்சியிடம் கேட்கும் பொழுது முதல்வரை குறிப்பிட்டு நாங்கள் பேசவில்லை என்று விளக்கம் கூறுகிறார்கள். ஆனால் ஓபன் ஆக சொல்ல வேண்டும் என்றால் அது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தான் என்று விமர்சித்தார்.
எங்களைப் பொறுத்தவரை அரசியல் விமர்சனம் யார் வேண்டுமானால் வைக்கலாம். ஆனால் பார்த்து பேச வேண்டும். அவர் கண்டிப்பாக குறிப்பிட்ட கட்சியினரிடம் இருந்து காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார். குறிப்பிட்ட ஒரு கட்சியின் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால், அந்தக் கட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசலாம். எங்கள் தலைவர் விஜய் அவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசட்டும். அதற்கு மக்கள் தங்களுடைய பதிலைச் சொல்வார்கள்
ஒரு நிகழ்ச்சியில் பொதுவாக பேசப்படும் கருத்துகளை அரசியல் ரீதியாக மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அரசியல் விமர்சனம் என்றால் அது வெளிப்படையாக இருக்க வேண்டும்.
விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்
இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கவுண்டம்பாளையம் தொகுதியிலும் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருந்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
மக்கள் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர். அரசியலில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் இறுதியில் மக்கள் எதை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்கள் நேரடியாக காணும் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் தங்களது முடிவுகளை எடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
