தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாத நிலையில் கோவை மாவட்டத்தில் பல இடங்களில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், பல இடங்களில் 1,500 அடிக்கு மேல் போர்வெல் துளையிட்ட போதும் நிலத்தடி நீர் காணப்படாத அபாயகரமான சூழல் நிலவுவதாகவும் இதனால் நீர்நிலைகளை மேம்படுத்தவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: புவிவெப்பமயமாதல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மக்கள் உயிர்வாழ அடிப்படை தேவையான தண்ணீர் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு தன்னார்வ அமைப்பினர் பொதுமக்கள் உதவியுடன் நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் நீர்நிலைகளை பாதுகாப்பதில் முன்னோடியாக திகழ்கிறது. கோவையில் உக்கடம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகளில் மக்கள் பங்களிப்பு அதிகம் தொடரந்து காணப்படுகிறது.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து வரும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தகைய சிலைகள் தயாரிப்பு பணியில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற ரசாயனம் தான் நீர்நிலைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

மண் உள்ளிட்ட சுற்றுச்சூலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தயாரித்த விநாயகர் சிலைகளை பயன்படுத்தினால் நீர்நிலைகளை பாதுகாக்க முடியும். ஒருபுறம் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயன பொருட்கள் கொண்டு பயன்படுத்தப்படும் விநாயகர் சிலைகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ கணபதி கோயிலில் புற்று மண் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதற்குள் வேம்பு விதைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று பல வகையான சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

அக்காலத்தில் மண் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த பின் அவை குளக்கரைகளில் வைக்கப்படும். மழை பெய்யும் போது அந்த சிலைகளில் உள்ள மண் கரைந்து குளக்கரை பகுதிகளில் மண் வலுவாக இருக்க உதவும்.

ஆனால் தற்போது பல்வேறு ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை குளக்கரைகளில் கரைக்கும் போது அவை படிவம் போல் கீழே படிந்து நீர், நிலத்திற்குள் செல்ல முடியாத வகையில் தடுப்பு ஏற்படுத்துகின்றன. இதனால் நீர்நிலைகள் மாசடைவது மட்டுமின்றி மழைக்காலங்களில் நீர் நிலத்திற்குள்ள இறங்க முடியாத அவல நிலை ஏற்படுகிறது.

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டன. 1,500 அடி வரை போர்வெல் துளையிட்ட போதும் நீர் காணப்படாத அவல நிலை பல இடங்களில் காணப்படுகிறது. நீர்நிலைகளை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டியது அவசியம். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.