கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தியா-ஜப்பான் இடையிலான கல்வி, அறிவு, புதுமை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், கே-கேசிசிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கே.ஐ.டி. மற்றும் ஜப்பானைச் சேர்ந்த எச்2 இன்னோவேஷன் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் நிறுவனர் பொங்கலூர் நா. பழனிசாமி தலைமை வகித்தார். நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் யோசுகே மோரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் ஜப்பான் மொழி கற்றல் மூலம் கிடைக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், ஜப்பானில் உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து லட்சுமி நாராயணன் மற்றும் கருணாநிதி காசிநாதன் ஆகியோர் பேசினர்.
சிறப்பு விருந்தினர் யோசுகே மோரி பேசுகையில், ஜப்பானில் கல்வி உதவித்தொகை பெற்று உயர்கல்வி பயில்வதற்கும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குமான வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து, இந்தியா-ஜப்பான் கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, கே.ஐ.டி. வளாகத்தில் கிரீன் ஹைட்ரஜன் புத்தாக்க மையம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன், முதல்வர் ராமசாமி, துணைமுதல்வர் மைதிலி, கலந்து கொண்டனர்.
