இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான சேவைகளின் மீது பயணிகள் மத்தியில் பொதுவாகவே ஒரு அதிருப்தி நிலவுகிறது. ஏர் இந்தியா நிறுவனம், ஜனவரி 2022 முதல் டாடா நிறுவனத்திற்கு சொந்தமானது.

சேவை குறைப்பாடு, விமானம் புறப்படுவதில் தாமதம், தொழில்நுட்பக் கோளாறு, உடைந்த இருக்கைகள், விமானத்தில் போதிய வசதிகள் இல்லாமை என பல குற்றச்சாட்டுகளுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் ஆளாகி வருகிறது. பயணிகள் பலரும் இந்த விமான சேவையால் சிரமத்தைச் சந்திப்பதும், புகார் கூறுவதும்  தொடர் கதையாகி வருகிறது. இதனால் பெரும்பாலும் பயணிகளிடமிருந்து ஏர் இந்தியா விமான நிறுவனம் கடும் விமர்சனங்களை எதிர்கொள்கிறது.

கடந்த வாரம் ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தீப்பிடித்து, மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து நொறுங்கி விபத்தானதில் 241 பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தச் சூழலில் விபத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த விமானத்தில், பயணித்த ஆகாஷ் வாட்சா  என்ற நபர், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதை சுட்டிக்காட்டி வீடியோ பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், விமானத்தில் பயணிகளுக்கான சீட்டில் இருக்கும் டச் ஸ்கிரீன், தொலைபேசி என எதுவும் வேலை செய்யவில்லை. விமானத்தின் நிலையே அசௌகரியமாகஇருந்ததாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் அடுத்தடுத்து ஏர் இந்தியா விமானங்களில் குற்றச்சாட்டுகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. நேற்று (ஜூன் 15) கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால்தாமதமாகச் சென்றது.

அதேபோல நேற்று துபாயில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், ஏ.சி செயலிழந்ததால் 5 மணி நேரத்துக்கும் மேலாகப் பலரும் வியர்வையில் நனைந்தபடி உள்ளனர். சிலர் காற்றோட்டத்திற்காக விசுறுவதையும் வீடியோவில் காணமுடிகிறது.

இன்று ஹாங்காங்கில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் ஹாங்காங் திரும்பியது. இது போன்ற சம்வங்கள் பயணிகள் மத்தியில் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது.

2020, 2010, 1985, 1982, 1978, 1966, 1955, 1950, 1947 ஆகிய ஆண்டுகளில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விமானங்களில் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது மிக அவசியம். பல உயிர்களைச் சுமந்து, பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது, சேவை குறைபாடு, தொழில்நுட்பக் கோளாறு ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளன.