கோவை மாநகராட்சி ஆணையாளராக கட்டா ரவி தேஜா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ஆணையாளர் அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுபேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநகராட்சி ஆணையாளர், கோவை மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையில் பணியாற்றிய அனுபவம் உதவியாக இருக்கும்.
கோவை மாநகராட்சியைப் பொருத்தவரை குடிநீர் வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை, பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறிப்பாக பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கு கவனம் செலுத்துவேன். கோவை மாநகராட்சியில் பணிபுரிவதை பெருமையாக நினைக்கிறேன்.
கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு மக்களிடம் பேசும் பொழுது தான் பல்வேறு விஷயங்கள் தெரியவரும். கள ஆய்வு மேற்கொண்டு பிரச்சனைகளுக்கான முழுமையான தீர்வை காண்பேன். கோவை எனக்கு புதிது.
கோவை மாநகராட்சியில் திமுகவை சேர்ந்த 97 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியாக இருக்கும் பொழுது சவால் இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, என்ன விதிகள் உள்ளதோ அதன்படி நடப்போம் என்று தெரிவித்தார்.

