ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் ‘மஹாசத்சங்கம்’ நிகழ்ச்சி மலேசியாவின் பத்து மலையில் நடைபெற்றது. நிகழ்வில் மலேசியா மட்டுமின்றி ஆசிய-பசிபிக் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.

சத்குரு பேசுகையில், தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, அவர்களின் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பக்தி உணர்வு. தமிழ்நாட்டின் அடையாளமே கோயில்கள். நமது கலாச்சாரத்தில் பக்தி என்பது ஒரு கருத்தாகவோ, யாரோ கற்றுக் கொடுத்த ஒன்றாகவோ மட்டும் இல்லை. மரம், மாடு, பாம்பு, மலை, மேகம் என இயற்கையின் பல்வேறு அம்சங்களையும், மனிதர்களையும் கூட வணங்கும் தன்மை நமது கலாச்சாரத்தில் உள்ளது.

இளைஞர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. பதின்ம வயது குழந்தைகள் தெம்பாகவும், உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் இருக்க வேண்டும். ஆனால் 15 வயதிற்குட்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது அந்தக் குழந்தையைப் பற்றியது மட்டுமல்ல. நமது சமூகத்தை நாம் சரியாக வழிநடத்தவில்லை என்பதையும், இதற்குப் பின்னால் இருக்கும் அடிப்படையான பிரச்சினையை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதையும் காட்டுகிறது எனப் பேசினார்.
முன்னதாக அக். 7ம் தேதி, கோலாலம்பூரில் உள்ள மலேசியா சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற “விழிப்புணர்வான உலகைக் கட்டமைத்தல்” என்ற நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில், ஐ. நா சபையின் அமைப்புகள், இந்தப் பூமியில் இன்னும் 60 அறுவடைக் காலங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகக் கூறுகின்றன. அதாவது, இன்னும் 40 முதல் 45 ஆண்டுகளுக்குப் பிறகு உணவு உற்பத்தி செய்வது மிகவும் கடினமாகிவிடும்.

இப்போது நாம் நமக்கான உணவையோ, நமது குழந்தைகளுக்கான உணவையோ எடுத்துக்கொள்ளவில்லை. இன்னும் பிறக்காத குழந்தைகளுக்குச் சொந்தமான உணவை உண்டு கொண்டிருக்கிறோம். எனவே, மண் வளத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு நாடும் தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.
