தமிழகத்தில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பரம்பரை அறங்காவலர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்த சங்கத்தின் கோவை மண்டல தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்: சில கோவில்களில் வருமானம் மற்றும் நிர்வாகம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்கள் எழாமல், நேர்மையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை உறுதி செய்வதே எங்கள் சங்கத்தின் நோக்கம்.

எங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என்ற நிலைப்பாடு இல்லை. மாறாக, கோவில் நிர்வாகம் வெளிப்படையாகவும், நெறிப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்களது முக்கிய கோரிக்கை என தெரிவித்தார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோவில்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் சில முக்கிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

அவை, முன்னோர்கள் உருவாக்கிய திருக்கோவில்களுக்கு, அவர்களின் வாரிசுகளை மட்டுமே பரம்பரை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். திருக்கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களை சட்டப்பூர்வ நிர்வாகிகளாக இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரிக்க வேண்டும்.

மாநில மற்றும் மண்டல அளவிலான திருக்கோவில் நிர்வாக மற்றும் திருப்பணி குழுக்களில் பரம்பரை அறங்காவலர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் உயர்மட்ட குழுக்களிலும் தமிழ்நாடு திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.