செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து அந்நிறுவனங்கள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஐரோப்பாவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் அவர் பேசியதாவது: ஏஐ நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளால் உருவாகும் கார்பன் உமிழ்வு, அதிகளவில் பயன்படுத்தப்படும் நீர்வளம் மற்றும் நிலவளத்தின் விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும். சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை மறைப்பதற்குப் பதிலாக, அவற்றை வெளிப்படையாக பகிர்வது நிறுவனங்களின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியால் உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த நம்பகமான தரவுகள் போதுமான அளவில் கிடைக்காததால், அரசுகள் மற்றும் தரவு மையங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தி ஏஐ தொழில்நுட்பங்களை இயக்குவதற்கு நிறுவனங்கள் உறுதியளிக்க வேண்டும். அதேநேரத்தில், தங்களின் தொழில்நுட்ப செயல்பாடுகள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் உண்மையான தாக்கங்களை நிறுவனங்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஏஐ தரவு மையங்கள் மின்சார நுகர்வில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்து வருகின்றன. 2030ம் ஆண்டுக்குள் இவற்றின் மின்சாரத் தேவை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஏற்கனவே எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
