2026-27 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தமிழக அரசு இன்று தாக்கல் செய்தது. இதை நிதியமைச்சர் மரியா வில்சன் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் முன்பு தாக்கல் செய்தார்.
கோவை தொடர்பான திட்டங்கள்:
2035-36 ஆண்டுக்குள் அதிகபட்ச மின் தேவையின் அளவு 37,000 மெகா வாட்டை கடக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாநிலத்தின் மின் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்தக்கூடிய திட்டமான கோயம்புத்தூர்-அரியலூர் 765 கிலோ வாட் மின் பகிர்மான பாதை திட்டம் ரூ.4000 கோடி செலவில் அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டின் தென் மண்டலத்திலிருந்து பசுமை எரிசக்தியை கொண்டு செல்வதற்கு மிக முக்கியமாக விளங்கும் ரூ.1187 கோடி மதிப்பிலான பசுமை எரிசக்தி வழித்தடத்தில் இரண்டாம் கட்டம் மற்றும் ரூ. 1640 கோடி மதிப்பிலான விருதுநகர்-கோயம்புத்தூர் 765 கிலோ வாட் மின் பகிர்மான திட்டங்கள் செயல்பாட்டை அரசு வேகப்படுத்தும்.
மனித வனவிலங்கு மோதல்களை தவிர்க்க அறிவியல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய விரிப்பான திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இந்த திட்டம் கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், தேனி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மனித வனவிலங்கு மோதல்கள் அதிகமாக ஏற்படும் 100 கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
கோவையின் எதிர்பார்ப்புகள் என்னானது ?
குறு சிறு நடுத்தர தொழில் நிறுவன அமைப்புகள் சார்பில் மின் கட்டணம் தொடர்பான கோரிக்கைகள் கோவையில் இருந்து சென்றன. அதில் முக்கியமாக பிக்சட் டிமாண்ட் எனப்படும் நிலைக்கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அது தொடர்பாக அறிவிப்பு எதுவும் வரவில்லை.
அதேபோல குறுந்தொழில்பேட்டைகள் குறித்து அறிவிப்பும் இல்லை.
கோவை மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் எனும் வார்த்தை இடம்பெறவில்லை ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பொம்மச்சந்திரா வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசு ஆகிய இரண்டு அரசர்களுடன் தமிழ்நாடு அரசு பேசி வருகிறது.
ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை (10.1 கிலோமீட்டர் அவிநாசி சாலை மேபாலம்) நீடிப்பது தொடர்பாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல மேற்கு புறவழி சாலை திட்டத்தின் 2ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைகள் துறைக்கு ரூ. 21,524 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது கோவைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவனிக்கப்படவேண்டிய திட்டங்கள் :
எதிர்கால உலகில் தேவைப்படும் திறன்கொண்டவர்களாக பள்ளி மாணவர்கள் விளங்க முற்போக்கான பாடத்திட்டத்திற்கு – ரூ.25 கோடி ஒதுக்கீடு. கல்லூரி மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த வெற்றி மடிக்கணினி திட்டம். இதற்கு ரூ. 2000 கோடி ஒதுக்கீடு.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் விண்வெளி தொழில் முதலீட்டு மண்டலங்களாக அறிவிக்கப்படும். இதன்மூலம் தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
திருப்பூரில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமை வழி ஆடை உற்பத்தி ஊக்குவிப்பு செய்ய பல கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீட்டில் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி மையம் ஏற்படுத்தப்படும்.
2027-28 கல்வி ஆண்டில் மதுரையில் சிறப்பு அரசு சட்டக்கல்லூரி துவங்கப்படும்.
அரசு & தனியார் கூட்டு முயற்சியில் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களுக்கான 20,000 பொது சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.
பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் இணைந்து புதிய வீட்டுக் கூரை சூரிய மின் மானிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் சூரிய மின் பலகைகள் பொருத்தும் வீட்டு நுகர்வோருக்கு ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார உறுதி திட்டத்தின் கீழ் 150 நாட்களுக்கு வேலை வழங்கும் வெற்றி 150 திட்டம் செயல்படுத்தப்படும். 125 நாட்கள் வேலை நிறைவு செய்து உள்ள ஏழை எளிய குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பு அரசு வழங்கும். இதற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிலங்கள் மற்றும் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி தமிழகத்தில் சி.எம்.டி.ஏ மற்றும் டீ.டி சி.பி. பிற உள்ளாட்சி அமைப்புகள் என பல நிலைகளில் வழங்கப்படுகிறது. எனவே இப்பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய இணைய வழி திட்ட அனுமதி தளம் (SPEED) உருவாக்கப்படும். இதை செயல்படுத்த ரூ. 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக அனைத்து மாநகராட்சிகளிலும் வீதிகள் மேம்படுத்தப்படும். சரியான சாலை இணைப்பு நடைபாதைகள் மிதிவண்டிகளுக்கான தனிப்பாதைகள், மேம்பட்ட சாலை சந்திப்புகள் பள்ளி பாதுகாப்பு செல்லும் பாதை மற்றும் நவீன எல்.இ.டி தெருவிளக்குகள் ஆகியவை அமைக்கப்படும். நவீன நகர்புற சாலைகள் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள போதிய சாலைகள் பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ள சாலைகள் சரி செய்ய ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சாலைகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் ‘நம்ம சாலை’ செயலி மூலம் உடனுக்குடன் புகைப்படம் எடுத்து தகவல் தெரிவிக்கலாம். புகார் மேல் வேகமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தக நகரம் ஒன்று அறிவகம் எனும் பெயரில் உருவாக்கப்படும்.
திருநங்கைகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் திறன் பயிற்சி மற்றும் தொழில் துவங்க வாங்கி கடன் வசதி ஏற்படுத்தித்தரப்படும். மேலும் திருநங்கைகள் தங்குமிட வசதி ‘அரண்’ எனும் பெயரில் 5 மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும்.
அண்ணனின் சீர் – திருமணமாகும் பெண்களுக்கு ரூ.812 கோடி மதிப்பில் 8 கிராம் தங்க காசு மற்றும் 1 பட்டுப்புடவை வழங்கப்படும்.
தாய்மாமன் சீர் திட்டம் – அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2031க்குள் 5 லட்சம் இளைஞர்களை செயற்கை நுன்னறிவு திட்டத்தில் பயிற்சி கொடுத்து தயார்படுத்த ஏ.ஐ. தொழில்துறை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
விளையாட்டு துறையில் திறமைகொண்ட சிறுவர்களை 8-12 வயதுக்குள் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும், ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்க 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் தமிழகம் முழுக்க ஏற்படுத்தவும் முடிவு.
விவசாயிகளுக்கு வழங்கும் மின் மணியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ 1543 கோடி முதலீட்டில் 178 புதிய துணை மின் நிலையங்களை அமைக்கும் பணி அரசு மேற்கொள்ளும்.
வரும் 5 ஆண்டுகளில் 3000 திருக்கோவில்களுக்கு திருப்பணி செய்து விழா நடத்திடப்படும். 250 திருக்குளங்கள் மற்றும் 75 மரதேர்களை சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பக்தர்கள் அதிக அளவில் வரும் திருக்கோவில்களில் அவர்களின் அவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் திட்டமிட்டுப்பட்டுள்ளது.
தொழில்துறைக்கான அறிவிப்புகள்:
புதிய தமிழ்நாடு தொழில் கொள்கை வெளியிடப்படும். இந்தக் கொள்கை புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான வளர்ச்சி ஊக்குவிப்பதோடு எழுச்சி பெற்ற புதிய தொழில் துறைகளின் ஆதரித்து நிலையான வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டை முன்னெடுக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் வழிகாட்டி 3.0 எனும் புதிய முதலீட்டு சேவை அமைப்பை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு தேவையான தகவல்கள் அனுமதிகள் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் விரைவாக கிடைக்கும். வழிகாட்டி 3.0 அமைப்பின் முக்கிய அங்கமாக தமிழ்நாட்டின் ‘சிங்கிள் விண்டோ போர்டல் 3.0’ மேம்படுத்தப்பட்டு விரைவில் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் தொழில் துவங்குவதற்கு தேவையான முதலீட்ட திட்டங்களுக்கும் தேவையான அரசு அனுமதிகள் ஒப்புதல்கள், தடையின்மை சான்றிதழ்கள் ஓரங்கிணைந்து அவற்றை ஒரே இடத்தில் பெற முடியும். இதன் மூலம் தமிழகத்தில் தொழில் துவங்குவதும் முதலீடு செய்வதும் மேலும் எளிதாக்கி புதிய முதலீடுகளை இருப்பதற்கு தொழில் வளர்ச்சியை வேகப்படுத்தும் வழி ஏற்படும்.
தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் வெளிநாடு வாழ் தமிழர் முதலீட்டு சேவை பிரிவு அமைக்கப்படும்.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் நோக்கில் “மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்” , “ட்ரை போர்ட்ஸ்” மிக முக்கியமான இடங்களிலும், பெட்ரோல் ரசாயன தொழிற்சாலைகள் அவற்றுடன் தொடர்புடைய துணை தொழிற்சாலைகள் அமைக்கவும் தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளும்.
தமிழ்நாட்டின் புதிய துறைமுகங்களை அமைக்கவுள்ள சாத்தியங்களை அரசு ஆராயும்.
ரூ.90 கோடி மொத்தம் மதிப்பில் தமிழகத்தில் 5 புதிய தொழில் பயிற்சி மையங்கள் துவங்கப்படும்.
குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அறிவிப்புகள் :
எம் எஸ் எம் இ. எனப்படும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ. 2142 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
புதிதாக தொழில் துவங்குவோருக்கு மூலதன மானியம் மற்றும் வட்டி மானியம் பல திட்டங்களின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 225 கோடி , மூலதன மானியங்கள் திட்டத்தின் கீழ் ரூ. 352 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த ஸ்டீல் தயாரிப்பு ஊக்குவிப்பு தொடர்பாக, ஸ்டீல் ரோலிங் மில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தை தணிக்க, பசுமை ஸ்டீல் தயாரிப்பு உற்பத்தியை ஊக்குவிக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக ரூ. 60 கோடி நிதி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ரூ. 1678 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி ஜவுளி உற்பத்தி மாநிலமாக தமிழ்நாடு விளங்கினாலும் தொழில்நுட்ப ஜவுளி துறையில் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இதற்கான மேம்பாட்டு தொழில்நுட்பத்தை அணுகுவதில் சிக்கல்கள் உள்ளன.
இந்த இடைவேளையை பூர்த்தி செய்யும் விதத்தில் சர்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து தொழில் முனைவோர்களுக்கான தொழில்நுட்ப ஜவுளி மாற்றத்திற்கான திட்டம், தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
துறை ரீதியான நிதி ஒதுக்கீடு விவரம் : திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் பள்ளி கல்வி துறைக்கு மொத்தம் ரூ. 44,527 கோடி, உயர்கல்வி துறைக்கு ரூ. 8,393 கோடி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு ரூ.17,150 கோடி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.1,051 கோடி, சமூக நீதித்துறைக்கு ரூ.3937 கோடி, பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,700 கோடி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,485 கோடி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ. 9,818 கோடி , மருத்துவம் & மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.23,357 கோடி, கூட்டுறவு துறைக்கு ரூ.8,028 கோடி , தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு ரூ.4414 கோடி ஒதுக்கீடு, குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) துறைக்கு ரூ. 2,142 கோடி, கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ரூ.1678 கோடி, எரிசக்தி துறைக்கு ரூ.15,722 கோடி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.8852 கோடி, நெடுஞ்சாலைகள் துறைக்கு ரூ. 21,524 கோடி, போக்குவரத்து துறை ரூ.13,561 கோடி, நீர்வளத்துறைக்கு ரூ. 9267 கோடி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் & வனம் துறைக்கு ரூ. 1762 கோடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 29,863 கோடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ரூ. 39, 609 கோடி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ. 14,830 கோடி மற்றும் இந்து சமய அறநிலைய துறை ரூ.708 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

