இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் மற்றும் என்.எஸ்.டி.எல். முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி அறக்கட்டளை இணைந்து பிராந்திய முதலீட்டாளர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

மாணவர்களிடம் நிதி அறிவு, முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான முதலீட்டு பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பொன்னுசாமி தலைமை வகித்து பேசுகையில், நிதி அறிவின் அவசியத்தை வலியுறுத்தினார். மாணவர்கள் சரியான முதலீட்டு முடிவுகளை எடுத்து, பொறுப்பான முதலீட்டாளர்களாக உருவாக வேண்டும் என்றார்.

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செபி தெற்கு மண்டல அலுவலகத்தின் தலைமை பொது மேலாளரும், மண்டல இயக்குநருமான ஜோசப் திலீப், பத்திரச் சந்தை ஒழுங்குமுறை, முதலீட்டாளர் பாதுகாப்பு, சந்தை கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும், முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பதில் செபியின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, என்.எஸ்.டி.எல். முதலீட்டாளர் பாதுகாப்பு பிரிவின் துணை மேலாளர் ஆதர்ஷ் பேசுகையில், நிதி கல்வியின் முக்கியத்துவம், முதலீட்டு திட்டமிடல், முதலீட்டு மோசடிகளைத் தவிர்க்கும் வழிமுறைகள் மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

கருத்தரங்கில் மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில், பத்திரச் சந்தை, முதலீட்டு வாய்ப்புகள், முதலீட்டாளர்களின் உரிமைகள் மற்றும் நிதி திட்டமிடல் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.