மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வரக்கூடிய வெள்ளியங்கிரி மலையில் உருவாகும் சிறு நீரோடை தான் 150 கிலோமீட்டர் கடந்து பல்வேறு மாவட்டங்களை தாண்டி கரூர் மாவட்டத்தின் அருகே காவிரியில் கலக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

கோவை, திருப்பூர், ஈரோடு , கரூர் என கொங்கு மண்டலம் செழிக்க முன்னோருக்காலத்தில் முக்கிய காரணமாக இந்த ஆறு இருந்துள்ளது. அதுமட்டுமல்ல அரபிக் கடல் பகுதி துறைமுகத்துக்கும், பூம்புகார், நாகப்பட்டினம் துறைமுக நகரங்களுக்கும் இடையேயான முதன்மையான வணிகப்பாதையான ‘இராஜகேசரி பெருவழிப் பாதை’ இந்த ஆறு வழியாக சென்றுள்ளது என தகவல் உள்ளது. சேர சோழ பாண்டியர்களும் இப்பாதையை பயன்படுத்தி இருக்கின்றனர். கிரேக்க, ரோமானிய பகுதிகளுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான வணிகத்தின் மையமாக இப்பெருவழி இருந்துள்ளது.

ஒரு நீரோடையாக வெள்ளியங்கிரி மலையில் தோன்றி  34 சிறு ஓடைகள் ஒன்றிணைவதால் பலம் பெற்று கொங்கு மண்டலத்திற்கே நன்மை செய்த ஆறு ‘நொய்யல் ஆறு’. ஆனால் இன்று இது நகரமயமாகுதல், தொழில்மயமாகுதல் ஆகியவற்றால் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பாதிப்புக்குளாகி உள்ளது.

இந்த 34 ஓடைகளில் பல ஓடைகள் புதர் நிறைந்து, நீர் வழிப்பாதை மறைந்து உள்ளது. இந்த ஓடைகளை சீரமைத்தால் நொய்யல் புத்துயிர் பெறும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும், விவசாயம் செழிக்கும். எனவே இந்த சவால்கள் நிறைந்த பணியை மேற்கொள்ள பிரபல நீர் மேலாண்மை அமைப்பான சிறுதுளி களத்தில் இறங்கி பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நொய்யலை மீட்டெடுக்கும் முயற்சியில், இதுவரை முண்டந்துறை , மசவொரம்பு என 8க்கும் மேற்பட்ட சிறு ஓடைகள் சிறுதுளியால் சீரமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் புனரமைக்கவும், புதிதாக அமைக்கவும், நீர் வழிப்பாதைகள் தூர்வாரப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதனால் தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வரும் சூழலில் இந்த 8 ஓடைகளில் நீர் அதிக அளவில் தேக்கிவைக்க முடிகிறது.
SELIKUMSIRU scaled WATERSIRU scaled