கோவைக்கான இயற்கை அழகையும், நீர் ஆதாரத்தையும் அள்ளித் தருபவை மேற்குத் தொடர்ச்சி மலைகளே. இங்குள்ள வெள்ளியங்கிரி, மருதமலை, அனுவாவி உள்ளிட்ட பல மலைகள் ஆன்மிகத் தலங்களாக மட்டுமல்லாமல், பல்லுயிர் வளத்தைக் காக்கும் வனச் சூழலியல் மண்டலங்களாகவும் திகழ்கின்றன.

இவற்றின் பசுமையும் தூய்மையும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது, இந்த மலைகளுக்குச் செல்லும் மக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரின் பொறுப்பாகும். இருப்பினும், சில காலமாக இந்த மலைகளுக்குச் செல்வோர் தாங்கள் எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்களின் பிளாஸ்டிக் கவர்கள், குடிநீர்ப் பாட்டில்கள் போன்றவற்றை அங்கேயே வீசிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இவை மலைகளின் பசுமையான, தூய்மையான சூழலை மாசுபடுத்துவதுடன், பிற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இதைத் தடுத்து, மலைகளைத் தூய்மையாகப் பராமரிக்கும் நோக்குடன் வனத்துறையுடன் இணைந்து அயராது களப்பணியாற்றி வருகிறது “வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு”.

இந்த அமைப்பின் செயலாளர் பிரகாஷிடம் பேசியபோது, வனத்துறையின் அனுமதியுடன் தன்னார்வலர்களின் பங்களிப்போடு மலைகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளை முன்னெடுக்கத் தொடங்கிய முதல் ஆண்டிலேயே பல டன் கணக்கிலான பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

சவாலான இடங்களிலும் தூய்மை பணி

கழிவுகள் வெள்ளியங்கிரியின் ஏழு மலைகளின் பாதைகளில் மட்டுமல்லாமல், பக்தர்கள் வீசியெறிந்த துணிகள் மற்றும் நெகிழிக் கழிவுகள் ஆழமான பள்ளங்களிலும், செங்குத்தான பாறை இடுக்குகளிலும் சிக்கிக் கொள்கின்றன. இவற்றைப் பாதுகாப்பாக அகற்றுவது பெரும் சவாலான பணியாகும்.
VMPA 2 scaledஇவற்றை அகற்ற வேண்டும் என்ற உணர்வுடனும், பாதுகாப்பாகச் செயல்பட வேண்டும் என்ற தெளிவுடனும் அமைப்பின் சார்பில் தன்னார்வலர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இதற்குப் பக்கபலமாகத் தன்னார்வலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
VMPA 5 scaledஅவர்கள் உடலில் பாதுகாப்புப் பட்டைகளை அணிந்துகொண்டு, பாறைகளிலும் மரங்களிலும் கயிறுகளைக் கட்டி, மிகவும் சவாலான பள்ளங்களில் இறங்கிப் பிளாஸ்டிக் பாட்டில்களையும் கவர்களையும் சேகரித்து மேலே கொண்டு வருகின்றனர்.
VMPA 11 scaled“முதல் ஆண்டில் தொடர்ந்து 18 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் களப்பணியை மேற்கொண்டு, சுமார் 10 டன்னிற்கும் அதிகமான குப்பைகளை மலையிலிருந்து கீழே கொண்டு வந்து அகற்றினோம். 2026 வெள்ளியங்கிரி சீசனின்போது, பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுமார் 120 நாட்கள் அடிவாரத்தில் முகாமிட்டு, பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்கிறார்களா எனத் தீவிரமாகப் பரிசோதித்தோம். அவர்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். இதன் மூலம் சுமார் 9,328 கிலோ (கிட்டத்தட்ட 10 டன்) பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டன” எனக் கூறினார் பிரகாஷ்.
VMPA 4 scaled
மக்கள் இயக்கமாக

இதைச் சாத்தியமாக்குவதில் கோயில் நிர்வாகங்கள் மற்றும் வனத்துறையின் ஒத்துழைப்பு முக்கியக் காரணமாக இருந்தாலும், 100 சதவீத சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வரும் தன்னார்வலர்களும் முக்கியப் பங்காற்றுகின்றனர் என்கிறார் பிரகாஷ்.
VMPA 8 scaled

சுமார் 700 பேர் வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பில் பதிவு செய்து இணைந்துள்ளனர். கோவை மட்டுமல்லாமல், சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, மதுரை, அரியலூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள், தொழில்முனைவோர் எனப் பலரும் வார இறுதி நாட்களில் கோவைக்கு வந்து தன்னார்வப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
VMPA 8 1 scaled

இவ்வாறு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பணியாற்ற வரும் கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கும், வெளியூர்களிலிருந்து வரும் தன்னார்வலர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், உணவு மற்றும் பிற உதவிகளை அமைப்பின் நிர்வாகத்தினர் கவனித்துக் கொள்கின்றனர். இந்த அமைப்பின் நிறுவனர் சிவகணேஷ் (ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல் உரிமையாளர்), தனது சொந்தச் செலவிலேயே தொடர்ந்து உதவிகளை வழங்கி, தன்னார்வலர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

“சிவா அண்ணா, கடந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலையேறிவிட்டு கீழே திரும்பி வரும்போது, ஏழு மலைகளிலும் பக்தர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகள் சிதறிக் கிடந்ததைக் கண்டார். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அமைப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். அமைப்பின் நிறுவனராக மட்டுமல்லாமல், எங்களுடன் இணைந்து அவரும் களப்பணியில் ஈடுபடுவார்” எனப் பகிர்ந்து கொண்டார் பிரகாஷ்.
VMPA 3 scaled
பிற மலைகளிலும் தொடரும் தூய்மைப் பணிகள்

வெள்ளியங்கிரி மலையோடு இந்தப் பணிகள் நின்றுவிடவில்லை. கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற மலைக் கோயில்களான மருதமலை முருகன் கோயில், அன்னூர் – சிறுமுகை சாலையில் அமைந்துள்ள ஓதிமலை முருகன் கோயில், காங்கேயம் அருகேயுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில், தடாகம் அருகேயுள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோயில் ஆகிய திருத்தலங்களிலும் தன்னார்வலர்கள் பல வாரங்களாகத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
VMPA 15 scaled

புரட்டாசி மாதத்தில் பக்தர்களுக்காகத் திறக்கப்படும் பெருமாள்முடி மற்றும் மேல்முடி மலைகளில், வனத்துறையுடன் இணைந்து தடாகம், பாலமலை மற்றும் மாங்கரை ஆகிய மூன்று முக்கியச் சோதனைச் சாவடிகளில் சுமார் 50 தன்னார்வலர்கள் முகாமிட்டனர். அங்கு பக்தர்கள் கொண்டு செல்லும் பொருட்களைப் பரிசோதித்து, ஒரு பிளாஸ்டிக் பொருள்கூட மலைக்குள் எடுத்துச் செல்லப்படாத வகையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அமைப்பின் அடுத்த இலக்கு

நாங்கள் குப்பைகளை அகற்றிக்கொண்டே இருந்தாலும், அவற்றின் அளவு குறைவதற்குப் பதிலாக ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 2026ம் ஆண்டில் வீசப்பட்ட குப்பைகள் மட்டுமல்லாமல், 2001ம் ஆண்டில் வீசப்பட்ட பிஸ்கட் கவர்கள்கூட இன்னும் மலையில் கிடக்கின்றன.

மக்கள் மனது வைத்தால் மலைகளில் குப்பைகள் சேராமல் தடுக்க முடியும். ஆனால், அந்த மாற்றம் இன்னும் மிகக் குறைந்த அளவிலேயே நிகழ்ந்து வருகிறது.

பிளாஸ்டிக் குப்பைகள் இவ்வாறு மலைகளில் தேங்குவது பசுமையான சூழலுக்குப் பேரழிவை ஏற்படுத்தும். பெருமளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை மக்கள் இந்தப் புனித மலைகளில் விட்டுச் செல்கின்றனர். இதைக் கண்டு எங்களது பணியிலிருந்து நாங்கள் ஒருபோதும் ஓயப்போவதில்லை. ஆனால், மக்கள் குப்பைகளை வீசிச் செல்வதைத் தடுக்கத் தொழில்நுட்ப ரீதியிலான தடுப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதற்கு அரசு உதவ வேண்டும்.

எங்கள் தரப்பில் தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம். அடுத்தகட்டமாக, மலைகளின் தூய்மையைப் பேண வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு சேர்ப்பதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம் எனக் கூறினார் பிரகாஷ்.