கோவையில் கே.ஜி. மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவி ஒன்றின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சிவக்குமார், நடிகர் சத்யராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர்கள் இருவரும் கலகலப்பாக பேசினர். அப்போது நடிகர் சிவகுமாரிடம் ” நீங்கள் பிறந்த கோவையில் மருத்துவ கட்டமைப்பு இன்று இந்த அளவு மேம்பட்டிருப்பதைப் பற்றி எவ்வாறு உணர்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் சென்னைக்குப் பின்னர் சகல மருத்துவ வசதிகளும் உள்ள ஊர் கோவை தான். இதில் சந்தேகம் இல்லைஎன்றார். கே.ஜி. மருத்துவமனை பற்றி பேசுகையில், கோவையில் பல மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுகின்றன. 52 ஆண்டு வரலாறு கொண்ட கே.ஜி. மருத்துவமனையின் சாதனைகளை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. கே.ஜி.க்கென்று மிகப்பெரிய வரலாறு இருக்கிறது, இதனுடன் வேறு எதையும் ஒப்பிட முடியாது என பேசினார்.
சூலூர் அருகே உள்ள சிறு கிராமத்தில் தான் பிறந்து வளர்ந்த நாட்களில் மருத்துவமனைகள் இல்லாத நாட்களிருந்ததை நினைத்துப்பார்த்த அவர், இன்று இப்படி ஒரு பிரமாதானா மருத்துவமனையில் ரோபோடிக் போன்ற ஒரு கருவியை திறந்து வைக்க தனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி என கூறினார்.
இதை தொடர்ந்து, சிவகுமார் மற்றும் சத்யராஜ் இருவரிடமும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த வழி எது என கேட்டதற்கு, முதலில் சத்யராஜ், “மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளது. அதை இரண்டு கண்ணாக வைத்து பாதுகாத்தாலே போதும்,” என்றார்.
சிவக்குமார் பேசுகையில், கெண்டை காலை இரண்டாவது இருதயம் என்கிறார்கள் மருத்துவர்கள், எனவே முதலில் நன்றாக நடக்க வேண்டும். தினமும் 40 நிமிடங்கள் நன்றாக நடைப்பயிற்சி செய்யுங்கள். நமது ஆரோகியத்திற்கு ‘வைட்டமின் டி’ தேவை. அதை சூரியன் காலையில் தாராளமாக தருகிறது. அதே போல யோகா செய்யுங்கள். அது பளுதூக்குதலை விட மிகவும் நன்மை தரும். 45-50 வயதுக்கு மேல் அசைவத்தை கொடுத்துக் கொள்ளுங்கள். இதை நான் கடைபிடித்தேன்.
