பல காலமாக கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் கொட்டப்பட்டு வந்த கோழி இறைச்சி கழிவுகள் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை எடுக்க முக்கிய காரணமாக இருந்த கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா அவர்களுக்கு வெள்ளலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குறிச்சி–வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் K.S. மோகன் கூறியதாவது:- 

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்த கோழிக் கழிவுகளால் அப்பகுதி மக்களுக்கு கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டு வந்தது. மேலும், ஆரம்ப காலங்களில் கோழிக் கழிவுகள் நிலத்திற்குள் புதைக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயமும் உருவானது.

இந்த சூழ்நிலையில், குப்பைக் கிடங்கில் இறைச்சிக் கழிவுகளை மேலாண்மை செய்து வந்த தனியார் நிறுவனத்திற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து பல்வேறு புகார்களை அளித்ததன் விளைவாக, கடந்த ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு தடை விதித்தது.

இருப்பினும், அதன் பின்னர் மற்றொரு தனியார் நிறுவனம் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தினசரி கொட்டப்பட்டு வந்த கோழிக் கழிவுகளை தங்களது வாகனங்களில் எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டு வந்தது. ஆனாலும், தொடர்ந்து கடுமையான துர்நாற்றம் வீசியதால் பொதுமக்களின் பாதிப்பு நீடித்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போதைய மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கோழிக் கழிவுகளை எந்த வகையிலும் கொட்ட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி முறையிட்டோம்.

அதன் விளைவாக, இன்று (29.06.2026) முதல் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கோழிக் கழிவுகள் கொட்டப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை எடுக்க முக்கிய காரணமாக இருந்த கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.