கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்ட முன்மொழிவுகள் அனைத்தும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டு பணிகள் முடிவாகியுள்ளதாகவும், கோவையில் புதிய பேருந்து நிலையம் உறுதியாக அமையும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள மலை போன்ற குப்பைகளை ‘பயோ-மைனிங்’ (Bio-mining) முறையில் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பெரும்பாலான குப்பைகள் அகற்றப்பட்டு, இன்னும் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் அப்பகுதி முழுமையாகச் சுத்தமாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது பற்றி அவரிடம் கேட்டதற்கு, இது குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அரசின் கருத்துக்களை சொல்லி ஒரு சுமூகமான முடிவு எடுக்கப்படும் என அவர் விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் சீரமைக்கும் நோக்கில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 4,000 தானியங்கி இயந்திரங்களை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான டெண்டர் வரும் 5ம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும், அதன்பின் உரிய ஆவணப் பணிகள் முடிந்து நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இத்துறையில் நடந்த முறைகேடுகள் சரிசெய்யப்பட்டு, தற்போது 11 நிறுவனங்களிடமிருந்தும் சமமான முறையிலேயே கொள்முதல் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். மேலும், டாஸ்மாக் துறையில் சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், அவதூறுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் நலப் பணிகளில் அரசு கவனம் செலுத்தும் என்றும் கூறினார்.
இந்த பேட்டியின் போது கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

