தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு கைவினைக் கழகத்தின் சார்பில், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், ‘சிருஷ்டி 2026’ கண்காட்சி இன்று தொடங்கியது. சுகுணா கல்யாண மண்டபத்தில் செப்டம்பர் 17 முதல் 19 வரை 3 நாட்கள் கண்காட்சி நடைபெறுகிறது.

தமிழகத்தின் பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 66-க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

புடவைகள், ஜவுளிகள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், நகைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு உணவு வகைகளுடன் 11 உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 29 ஆண்டுகளாக கோவையில் நடைபெற்று வரும் ‘சிருஷ்டி’ விற்பனை, கைவினைஞர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை நேரடியாக இணைக்கும் முக்கிய தளமாக இருந்து வருகிறது.

இந்த விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய், கோவையில் ஆண்டுதோறும் நடைபெறும் கைவினைப் பொருட்கள் சந்தையில் பங்கேற்கும் கைவினைஞர்களுக்கான செலவுகளுக்கு மானியமாக பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
