ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயற்கை நுண்ணறிவு, புதுமை, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை சார்ந்த கற்றலை மேம்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஏஐ ஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஒப்பந்தத்தை, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் மற்றும் ஏஐ ஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் சலூர் ஸ்ரீகாந்த் பட்நாயக் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.
இதன் மூலம், மாணவர்களுக்காக ஐந்து பருவங்களைக் கொண்ட கட்டமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கற்றல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் நிறைவில், ஏஐஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் வழங்கும் ஜென்ரேட்டிவ் ஏஐ சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த சான்றிதழுடன் கூடுதலாக, மாணவர்களுக்குத் தொழில்துறைக்கு ஏற்ப பொருத்தமான செயற்கை நுண்ணறிவு பயிற்சிகள், நேரடி திட்டங்கள், ஆராய்ச்சி வாய்ப்புகள், நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் சர்வதேச அனுபவங்களை பெற முடியும்.
புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், ஏஐ ஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான அர்பித் யாதவ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆலோசகரான ஊர்வஸ்க் தஸ்தூர், பிசிஏ ஏஐ துறைத்தலைவர் ஜினி ஜேம்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
