கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராமை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர தேர்தல் பரப்புரையில் இன்று ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பரப்புரையின் போது முதலில் பேசிய அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம், மத்திய அரசுடன் இணைந்து கோவைக்கு புதிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவோம். தொழில், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் ஏற்படுத்தப்படும். கோவை ஒரு உலகத் தரம் வாய்ந்த நகரமாக உருவாக்கப்படும். அதற்கான அடித்தளங்களை அமைக்க தாங்கள் உறுதியாக உள்ளோம். அத்துடன், அண்ணாமலையை மத்திய அமைச்சராக கொண்டு வர முயற்சிப்போம் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து அண்ணாமலை பேசுகையில்: சிங்காநல்லூர் தொகுதியில் உண்மையான போட்டி ஒரே வேட்பாளர் இடையே தான் உள்ளது எனக் கூறி, கூட்டணியின் வலிமையை வலியுறுத்தினார். காங்கிரஸ் வேட்பாளர் சமீபத்தில் மட்டுமே தொகுதிக்கு வந்துள்ளார் என்றும், மக்க்கள் தொடர்பு இல்லாதவர்களாக உள்ளனர் என்றும் விமர்சித்தார்.
மேலும், கமல்ஹாசன் 19ஆம் தேதி கோவைக்கு வர உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முந்தைய காலங்களில் திமுகக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் தற்போது அரசியல் சூழ்நிலைக்கேற்ப மாறிவிட்டதாக கூறினார்.

தமிழகத்திற்கு வருவதில் ராகுல் காந்தி ஆர்வம் காட்டவில்லை என்றும், மக்கள் பிரச்சினைகளில் ஈடுபடாதவர் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், மு.கஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு எதிரானது எனக் கூறிய அவர், இந்த இரு கட்சிகளும் இணையும் போதெல்லாம் மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

