‘ஊர் கூடி தேர் இழுக்க ஊக்கப்படுத்தும் ஊர் கோயம்புத்தூர் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. இதை மற்றுமொருமுறை நிரூபித்துள்ளனர் நல்லிசெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த கோபாலும், கோவை குளங்கள் அமைப்பும்.

கோவை , அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரேகவுண்டன்பாளையம் பஞ்சாயத்து நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் பழமையான குளம் ஒன்று அமைந்துள்ளது. நீண்ட காலமாகப் பராமரிப்பின்றி போன இந்த குளத்தை கண்டு அப்பகுதியை சேர்ந்த கோபால், மனமுடைந்தார்.
ADOOBE scaled
மாற்றுத்திறனாளியான கோபால், இதை சீரமைக்க தன்னால் முடியாது என எண்ணாமல், “என்னால் முடிந்ததை செய்வேன்” என எண்ணி, தனது நண்பர் மூலம் கோவை குளங்கள் அமைப்பை தொடர்புகொண்டு குளத்தைத் தூர்வாரித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கோபாலின் தன்னலமற்ற கோரிக்கையை ஏற்ற கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் திட்டப்பணிகளை முன்னெடுத்தது. இத்திட்டத்திற்கு ‘மோல்டு மாஸ்டர்ஸ்’ எனும் நிறுவனத்தின் நிதியுதவி கிடைத்தது.

அதையடுத்து உள்ளூர் பொதுமக்களின் ஆதரவு, ஒத்துழைப்புடன் சுமார் ரூ.38.43 லட்சம் மதிப்பீட்டில் குளத்தைச் சீரமைக்கும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடிவடைந்தன. சுமார் 12 ஏக்கர் நீர்ப்பிடிப்புப் பரப்பளவு கொண்ட இக்குளம், சீரமைப்பிற்கு முன்பு 2.59 கோடி லிட்டர் கொள்ளளவு மட்டுமே கொண்டிருந்தது.

தற்போது தூர்வாரப்பட்டதன் மூலம் இதன் கொள்ளளவு 5.39 கோடி லிட்டராக உயர்ந்து, கூடுதலாக 2.79 கோடி லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும் ஆற்றலை பெற்றுள்ளது. இந்நிலையில் சீரமைக்கப்பட்ட இக்குளத்தில் சமீபத்தில் பெய்த மழையால் நீர் நிரம்பி உள்ளதால் ஊர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
LAKEINC scaledகுளத்தில் இவ்வாறு நீர் தேக்கப்படுவது அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்த்த உதவுவதோடு, விவசாயத்திற்கும், பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்கும்  இயற்கை தந்த வரமாய் அமைந்துள்ளது.

இதுபற்றி கோவை குளங்கள் அமைப்பின் நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்:-

நமது மாவட்டத்தில் பெய்யும் மழைநீரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள நீர்நிலைகளைத் தூர்வாரி, சேமிப்புக் கட்டமைப்புகளைப் பலப்படுத்த வேண்டியது  அவசியம். கோவை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 650 மி.மீ என்ற அளவில் இருக்கும் நிலையில், சமீபத்திய வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஒரே மாதத்தில் அதிக மழைப்பொழிவைப் பெற்றுத் தமிழகத்திலேயே கோவை முதலிடம் பிடித்தது.
MANIKANDANKOKO scaled

இருந்தாலும் சுந்தராபுரம், கோவைப்புதூர் மற்றும் பட்டணம் உள்ளிட்ட தெற்குப் பகுதிகளின் நில அமைப்பு இயற்கையிலேயே சரிவாக இருப்பதால், மழைநீரை முறையாகச் சேமிக்காவிட்டால் அந்த உபரி நீர் வீணாகக் கேரளா எல்லைப் பகுதிகளை நோக்கி வழிந்தோடிவிடும் அபாயம் உள்ளது. எனவே, குளங்களைத் தூர்வாரி, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தினால் மட்டுமே இந்த நீரைத் தக்கவைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும்.

இதை நாங்கள் மட்டும் செய்யமுடியாது, மக்களின் பங்களிப்பும் தேவை. மாவட்டத்தில் பராமரிப்பில்லாத நூற்றுக்கணக்கான குளங்கள், குட்டைகளை மீட்டெடுக்க உள்ளூர் மக்களின் பங்களிப்பு வேண்டும். கோபால் போன்ற உள்ளூர் மக்களின் ஆர்வமும் தீவிர முயற்சியுமே ஒரு நீர்நிலையை மீட்டெடுக்கத் தொடக்கப் புள்ளியாக அமைகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.