கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டருக்கு இடையே உள்ள டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் 69 டாஸ்மாக் மதுபான கூடங்கள் மூடப்பட உள்ள நிலையில், உடனடியாக இன்று ஒரே நாளில் நான்கு மதுபானக்கூடங்களை அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர்.
கோவை மாவட்டம் முழுவதும் 284 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. அதில் கோவை வடக்கு சரகத்தில் 156 கடைகளும், கோவை தெற்கில் 128 கடைகளும் அடங்கும்.
இந்த நிலையில் கோவில்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு இடையேயான டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து கோவை வடக்கு சரகத்தில் 48 மற்றும் தெற்கு சரகத்தில் 21 என மொத்தம் 69 கடைகள் மூடப்பட உள்ளன.

மேலும் கணக்கெடுக்கப்பட்டுள்ள 69 டாஸ்மாக் மதுபான கடைகளும், அடுத்த 15 நாட்களுக்குள் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள சூழலில் முதற்கட்டமாக கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான கடை, வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள மதுபான கடை, கோவை தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய மதுபான கடை மற்றும் பொள்ளாச்சி சந்தை அருகே செயல்பட்டு வரக்கூடிய மதுபான கடை உள்ளிட்ட 4 கடைகளுக்கு உடனடியாக சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு எதிரே மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையில் இருந்து இரண்டு கட்டிடங்களுக்கு அடுத்தபடியாக எலைட் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள பேருந்து ஓட்டுனர் நடத்துனர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர், டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டிருக்கும் அரசு அதே பகுதியில் செயல்பட்டு வரும் எஃப் எல் டு என்ற பெயரில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடங்கள், விடுதிகளுடன் செயல்படும் கேளிக்கை விடுதிகள் மற்றும் மதுபான கூடங்கள் ஆகியவற்றையும் மூட உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

