ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் அனைவரும் இணைந்து யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொண்டதோடு 108 முறைதொடர் சூரிய நமஸ்காரம் செய்தனர்.
ஆழியாறு வாழ்க வளமுடன் அமைப்பின் யோகா பேராசிரியர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு யோகா மற்றும் தியானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்துப் பயிற்சியளித்தார். யோகா மூலம் உடல் ஆரோக்கியம், மனஅமைதி மற்றும் ஒட்டுமொத்த நலவாழ்வை மேம்படுத்த முடியும் என்ற அவர், தற்காலத்தில் இளம்வயதிலேயேஉடல் மற்றும் மன நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளதால் யோகப்பயிற்சிகளை மக்கள் வாழ்வின் ஒரு அங்கமாகக் கருத வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி கல்லூரி முதல்வர் சித்ரா பேசும்போது, யோகா மற்றும் தியானப் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். எங்கள் கல்லூரியில் மாணவிகள் தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் எளிமையான மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இதனால் காலைநேரப் பரபரப்பு, பதட்டம் இல்லாமல் நிதானமாகவும் தெளிவான மனநிலையோடும் மாணவிகள் நாளைத் தொடங்குகின்றனர். இதனால் அவர்களின் மனநலமும் கற்றல்திறனும் மேம்படுகிறது என்று குறிப்பிட்டார்.
