சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் உலக யோகா தினத்தையொட்டி மரம் நடு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சச்சிதானந்த பள்ளி மற்றும் ஜெர்மனி எர்ஃபர்டிலுள்ள கொனிஜென் லூயி ஜிம்னாஷியம் பள்ளிகளுக்கிடையிலான கலாச்சாரப் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி, அப்பள்ளியின் 22 மாணவ மாணவியர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் பள்ளியில் இருபது நாட்கள் தங்கியிருந்து தமிழ் மொழி கலாச்சாரம் இசை, நாட்டியம், மற்றும் கலைகள் பற்றி அறிந்துகொள்ளவுள்ளனர். ஜெர்மனி பள்ளி மாணவ மாணவியரும் உலக யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சியில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். மரம் நடு விழாவில் பேசிய பள்ளிச் செயலர் கவிதாசன், ஒரு பூவை நாம் வெறும் விருப்பத்தோடு அணுகும்போது அதைத் தொட்டு ரசித்து, பறித்துவிடுகிறோம். ஆனால், அதன் மீது அன்பு செலுத்தும்போது, அதைப் பறிக்காமல் நீர் ஊற்றி, பாதுகாத்து வளர்க்கிறோம்.

அதேபோல், எந்தத் தாவரத்தையும் வெறும் விருப்பமாகப் பார்க்காமல், அன்போடு வளர்க்க வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.