கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், விசைத்தறி நெசவாளர்களுக்கும் கூலி உயர்வு மற்றும் இலவச மின்சார உயர்வை சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி 10 சதவீதம் உயர்த்தப்படும் என்றும், ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு மண்டல துணை இயக்குநர் அலுவலகம் அமைக்கப்படும் என்றும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்தார். ஆனால், விசைத்தறியாளர்களுக்கு எந்தவித அறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கந்தவேல் கூறியதாவது:த.வெ.க. தேர்தல் வாக்குறுதியில் விசைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு இலவச மின்சாரம் 1,000-ல் இருந்து 1,500 யூனிட்டாகவும், கைத்தறிக்கு 300-ல் இருந்து 500 யூனிட்டாகவும் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது கைத்தறிக்கு மட்டுமே சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது 1.77 கோடி பேருக்கு 2 மீட்டர் இலவச வேட்டி மற்றும் 5.5 மீட்டர் இலவச சேலை வழங்கப்பட உள்ளது. முன்பு 3.75 மீட்டர் நீள வேட்டிக்கு ரூ.24.30 கூலி வழங்கப்பட்ட நிலையில், தற்போது நீளம் 2.மீட்டராக குறைக்கப்பட்டு கூடுதல் தரத்துடன் நெய்யப்பட்டாலும் ரூ.14.68 மட்டுமே கூலியாக வழங்கி வஞ்சிக்கப்படுகிறோம்.

எனவே வேட்டிக்கு ரூ.24.48, சேலைக்கு ரூ.63.36 என கூலியை உயர்த்த வேண்டும். விசைத்தறி நெசவாளர்களின் கூலி உயர்வு மற்றும் 1,500 யூனிட் இலவச மின்சாரக் கோரிக்கையை முதல்வர் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.