வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், கோவை மாவட்டம் முழுவதும் 1,065 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இதன்படி, நவம்பர் 21, 22, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெறும். இம்முகாம்களில் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் ஈடுபடுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய படிவங்கள்:

படிவம் 6: புதிய வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் சேர்க்க.

படிவம் 6ஏ: வெளிநாடு வாழ் வாக்காளர்களின் பெயர்களைப் பதிவு செய்ய.

படிவம் 6பி: ஆதார் எண்ணை இணைக்க.

படிவம் 7: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க.

படிவம் 8: வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்த, ஒரே தொகுதிக்குள் முகவரியை மாற்ற, வாக்காளர் அடையாள அட்டையைப் பெற அல்லது மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்ய.

மேற்கண்ட திருத்தங்களை மேற்கொள்ள விரும்பும் வாக்காளர்கள், தங்களுக்குரிய விண்ணப்பப் படிவங்களைச் சிறப்பு முகாம்களில் சமர்ப்பிக்கலாம். மேலும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.