கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் 2026ம் ஆண்டுக்கான கிளப்புகளுக்கு இடையேயான லீக் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
முன்னாள் கோவை மாவட்ட டென்னிஸ் சங்க தலைவர் மற்றும் புகழ்பெற்ற டென்னிஸ் நிர்வாகி ரமேஷ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
2026ம் ஆண்டுக்கான போட்டியில் 11 பிரிவுகளில் 116 அணிகள் பங்கேற்றதுடன், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் நீலகிரி பகுதிகளைச் சேர்ந்த 1,117 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டிகள் கடந்த ஜனவரி 24-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை கோவையில் பல இடங்களில் நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை வகித்து சங்கத் தலைவர் சீனிவாசன் பேசுகையில்: 1970-களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட சிடிடிஏ, தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் மற்றும் அகில இந்திய டென்னிஸ் சங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் டென்னிஸ் விளையாட்டை வளர்ப்பதில் சங்கம் முக்கிய பங்காற்றி வருகிறது. அதன் முயற்சிகளால் கே.ஜி. ரமேஷ், நிருபமா வைத்தியநாதன், ஸ்ரீராம் பாலாஜி, ரஞ்சித் விராலி-முருகேசன் மற்றும் வளர்ந்து வரும் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி உள்ளிட்ட பல்வேறு சிறந்த வீரர்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
நிகழ்வில் கோவை மாவட்ட டென்னிஸ் சங்க தலைவர் ஸ்ரீனிவாசன், செயலர் சதீஷ் குமார் நாயர், பொருளாளர் நரேந்திரா, கிளப் பிரதிநிதிகள், நிர்வாகிகள், வீரர்கள் கலந்து கொண்டனர்
