“ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம் முடிந்த அதே நாளில் புது கட்டணம் நிர்ணயம்”

கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு) சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுனர்கள், பொருளாதார நெருக்கடியில் இருந்து ஆட்டோ தொழிலை பாதுகாக்க ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தவேண்டும், ஆட்டோக்களுக்கு பெட்ரோல், டீசல் மானியம் வழங்க வேண்டும், ஆட்டோ தொடர்பான உதிரி பாகங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக ஆட்டோ ஓட்டுநர்கள் முன்வைத்து வந்த மீட்டர் கட்டண உயர்வு தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கான புதிய மீட்டர் கட்டணத்தை அதிகாரப்பூர்வமாக மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச தூரம் 1.8 கிலோமீட்டராக நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 1.8 கி.மீ தூரத்திற்குப் பிறகு பயணிக்கும் கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா ரூ. 25 கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பயணிகள் ஆட்டோவை நிறுத்தி காத்திருக்கச் செய்யும் நேரத்திற்கான காத்திருப்புக் கட்டணமாக, ஒரு நிமிடத்திற்கு ரூ. 1 வீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மலைப்பாதைகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்குச் சமவெளிப் பகுதிகளை விட 1.2 மடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதன்படி மலைப்பாதைகளில் குறைந்தபட்ச அடிப்படைக் கட்டணம் ரூ. 60 ஆகவும், கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்குமான கட்டணம் ரூ. 30 ஆகவும் இருக்கும்.

இரவு நேரப் பயணங்களுக்குக் கூடுதல் கட்டண நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை பயணிக்கும் ஆட்டோக்களுக்கு வழக்கமான பகல் நேரக் கட்டணத்தை விட 1.5 மடங்கு வரை கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.