2007ம் ஆண்டு போக்குவரத்துக்கழக ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய அரசு நியமித்த நிபுணர் குழு அளித்த பரிந்துரைப்படி பென்சன் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அதுவரை போக்குவரத்துக் கழக பென்சன் திட்டத்திற்க்கு அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு அரசு போக்குவரத்துக் கழக ஒய்வுபெற்றோர் நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்துடன் பல்வேறு கோரிக்கைகளை இவ்வமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்:
2016 முதல் 120 மாதங்களுக்கான போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்க வேண்டும், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 01.09.1998 ஊதிய ஒப்பந்த சரத்துபடி 2003க்கு பின் சேர்ந்தவர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். அதுவரை TAPS திட்ட அரசாணைப்படி இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கும் 01.07.2026 முதல் அமுலாக்க வேண்டும், குறைந்த பட்ச பென்சன் ரூ.7850/- வழங்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியை ரூ.300/- ஆக உயர்த்தி குடும்ப ஓய்வூதியர் உட்பட அனைவருக்கும் வழங்க வேண்டும், 2026 ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு காலப் பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என பல கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுபோன்ற நீண்டநாள் கோரிக்கைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

