கதாகாலட்சேபம் என்பது இசையோடு கூடிய கதை சொல்லும் ஒரு உன்னதமான இந்தியக் கலை வடிவமாகும்.
இக்கலையை 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளிலும் கொண்டு சேர்த்து வருகிறார் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ‘கலைமாமணி’ விசாகா ஹரி.
இவர் ‘சரணாகதி’ என்னும் தலைப்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள பாரதீய வித்யா பவனின் வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் கதாகாலட்சேபம் நிகழ்த்த உள்ளார்.
சரணாகதி என்பது சனாதன தர்மத்தில் ஒரு உயர்ந்த தத்துவமாக கருதப்படுகிறது. இது பக்தியின் உயர்நிலை ஆகும். ஹிந்து மதத்தின் ஆழ்ந்த நூல்கள் இதனை மிகவும் போற்றிக் கூறியுள்ளன.
கோவையில் நடைபெறும் இந்த நிகழ்வில், ராமாயணத்தின் விபீஷண சரணாகதி, மஹாபாரதத்தின் திரௌபதி சரணாகதி, பாண்டவ வீரனான அர்ஜுனனின் சரணாகதி ஆகியவற்றுக்குள் புதைந்து கிடக்கும் ஆழமான தத்துவங்களையும் உண்மைகளையும் எடுத்து விசாகா ஹரி அவருக்கே உரித்தான பாணியில் இசையுடன் கலந்து கூறி நிகழ்ச்சியை காணவருவோரின் செவிக்கும், சிந்தைக்கும் பரிசளிக்கவுள்ளார்.
நிகழ்ச்சி 2 நாட்களும் பவன் வளாகத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும். மாலை 8 மணிக்கு நிறைவுபெறும்.

