கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 2-வது நாளாக செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது: “நாங்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டம் தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல; பல ஆண்டுகளாக நாங்கள் சந்தித்து வரும் கோரிக்கைகளையும் மன வருத்தங்களையும் அரசின் கவனத்திற்கு நேர்மையாகக் கொண்டு செல்லவே இந்த அமைதிப் போராட்டத்தை நடத்துகிறோம்” எனக் குறிப்பிட்டனர்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுத் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை உடனடியாகக் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு நிகராகத் தமிழகத்திலும் செவிலியர்களை ‘செவிலியர் அலுவலர்’ என அதிகாரப் பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய முறையை முற்றிலும் கைவிட்டு, அரசு மருத்துவமனைகளில் புதிய நிரந்தரப் பணி இடங்களை மட்டுமே உருவாக்க வேண்டும்.

சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள 2,500 புதிய செவிலியர் பணி இடங்களை வரவேற்பதாகத் தெரிவித்த செவிலியர்கள், தங்களது இந்த நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்றனர்.
தொடர்ந்து பேசிய செவிலியர்கள், “எங்களது நியாயமான கோரிக்கைகளை முதல்வர் விஜய் நிறைவேற்றித் தந்தால், தமிழகச் செவிலியர்களின் வரலாற்றில் என்றென்றும் நீங்காத இடம் பிடிக்கும் முதல்வராக அவர் திகழ்வார். இதைத் தமிழகச் செவிலியர்களாகிய நாங்கள் உயிருள்ளவரை மறக்க மாட்டோம்” என வேண்டுகோள் விடுத்தனர். தொடர்ந்து அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.
