கோவை கோல்ட் வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் கோவை தொழில் முனைவோர் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துரையாடல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் பெம்மாசணி சந்திரசேகர், ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி , சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே ஆர் ஜெயராமன், கோவை தெற்கு வேட்பாளர் அம்மன் அர்ஜூனன், சூலூர் தொகுதி வேட்பாளர் கந்தசாமி, கவுண்டம்பாளையம் தொகுதி பி.ஆர்.ஜி அருண்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
கலந்துரையாடல் நிகழ்விற்கு பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: தமிழக தேர்தலைப் பொறுத்தவரை புதிய கட்சி குறித்து கருத்து சொல்ல முடியாது. தேர்தலுக்குப் பிறகுதான் அதன் நிலை குறித்து தெரியும்.
இங்கு, காங்கிரஸ், திமுக கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு தான் போட்டி. நாடு முழுவதும் என்ன நடந்திருக்கிறது என்பது தெரியும். கடந்த 12 ஆண்டுகளாக நிலையான ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். டபுள் இன்ஜின் சர்க்கார் உள்ள மாநிலங்களில் சிறந்த வளர்ச்சியை பார்த்து வருகிறோம். சிறந்த மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த விதமான வளர்ச்சியும் இல்லை.
இவர்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தடுத்திருப்பது தென்னிந்திய மகளிருக்கு செய்யும் மிகப்பெரிய அநீதி. ஏன் இந்த மசோதாவை எதிர்த்தார்கள். இதில் என்ன பலன் அவர்களுக்கு கிடைத்தது என கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு டெல்லியை வீழ்த்தியதாக கூறுகின்றனர் அவர்கள் டெல்லியை வீழ்த்தவில்லை தென்னிந்தியாவின் பங்கை வீழ்த்தி விட்டனர். 50% தொகுதிகளின் எண்ணிக்கை உயரும் எனக் கூறிய பின்பும் இதை எதிர்ப்பதற்கான காரணம் என்ன.?
மகளிருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தடுத்து விட்டார்கள். இது நமது தேசத்திற்கும், மக்களிற்கு செய்த துரோகம் ஆகும். 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையரை மேற்கொண்டால் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
தொடர்ந்து நதிநீர் இணைப்பு குறித்த கேள்விக்கு, ஆரம்பம் முதல் நதிநீர் இணைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் கங்கா முதல் காவேரி வரை நதிகள் இணைக்கப்பட்டால் தேசத்தின் வளர்ச்சி உறுதி செய்யப்படும் எனவும் அது பிரதமர் மோடியால் சாத்தியமாகும் எனவும் தெரிவித்தார்.
