கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள மாநகராட்சி பேருந்து நிலையம், நவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது போதிய பராமரிப்பின்றி காணப்படுவதாகப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர இருக்கை வசதிகள், பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள், நவீன கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டன.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி இந்தப் பேருந்து நிலையம் பல்வேறு குறைபாடுகளுடன் காட்சி அளிக்கிறது. தாய்மார்களின் நலனுக்காகப் பேருந்து நிலையத்தில் குழந்தைகளுக்குப் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டது.

மின்விசிறி மற்றும் விளக்குகள் இருந்தாலும் பல நாட்களாக மின்சார இணைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்த அறை இருட்டில் மூழ்கியுள்ளது. உள்ளே தாய்மார்கள் இருட்டில் தான் பாலூட்டவேண்டிய நிலை நிலவுகிறது.
பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்குகளில் சில சரிவர எரிவதில்லை. வழக்கமாகவே இங்குள்ள விளக்குகள் எரியாமல் பழுதாகிப் போய் கிடப்பதாக அங்கு வரும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
அரசு மருத்துவமனையில் இருந்து வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அருகிலுள்ள பள்ளிகளிலிருந்து வரும் மாணவ-மாணவிகள் எனப் பலரும் பேருந்திற்காக இங்கு காத்திருக்கின்றனர். ஆனால், சில நபர்கள் மது அருந்திவிட்டு இருக்கைகளில் படுத்து உறங்குவதாலும், அங்குத் திறந்தவெளியில் அமர்ந்து கொள்வதாலும், பயணிகள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் இங்கு அமரவே தயங்கும் சூழல் நிலவுகிறது.
பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் வாகன நிறுத்துமிடம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் குளம், இருந்தாலும் மற்றொரு பகுதியில் கழிவுநீர் சாக்கடை அமைந்துள்ளது. சாக்கடை நீர் தேங்கி நின்றுகொண்டு துர்நாற்றத்தை வளாகத்தில் வீசுகிறது.

இவற்றை சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுகின்றனர். அதே போல, பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நான்கு பெரிய விளம்பரப் பலகைகளில், ஏதேனும் ஒன்றில் டிஜிட்டல் முறையிலான பேருந்து நேர அட்டவணையை அமைத்துத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

