விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை  காரணமாக கோவை விமான நிலையத்தில் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையால் வழக்கத்தை விட விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதற்கு ஏற்ப விமான கட்டணங்கள் குறிப்பாக கோவை -சென்னை இடையே பல மடங்கு உயர்ந்துள்ளது.  குறிப்பிட்ட சில நேரத்திலே இயக்கப்படும் விமானத்தில் பயணிக்க 16 ஆயிரத்து 661 ரூபாய் கட்டணம் (அதிகபட்ச) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை -சென்னை இடையே ரூ.6,300 முதல் ரூ.6,500 வரை சராசரி கட்டணத்தில் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.16, 661 என இந்த மூன்று நாட்கள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கோவை -டெல்லி இடையே இயக்கப்படும் விமானங்களிலும் கட்டணம் அதிகரித்துள்ளது. வழக்கமாக ரூ.8,000 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாட்களில் விமான கட்டணம் அதிகபட்சமாக 14 ஆயிரத்து 956 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை -மும்பை மற்றும் கோவை -பெங்களூர் வழிதடங்களில் இயக்கப்படும் விமானங்களில் கட்டணங்கள் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. பெங்களூருக்கு பெரும்பாலும் காரில் சென்று விடுகின்றனர் என்றும், கோவை- மும்பை இடையே கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.