நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த அக்டோபர் 24ம் தேதி பெய்த கனமழையால் மரப்பாலம் முதல் கல்லார் வரையிலான பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டது.
குறிப்பாக, பர்லியார் பகுதியில் ஏற்பட்ட பெரிய மண் சரிவு காரணமாக, அப்பகுதியில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சேதமடைந்த சாலையை பல்வேறு துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வந்த நிலையில், சாலையின் தன்மையைப் பொறுத்து விரைவில் திறக்கப்படும் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் இருந்து வருகை தந்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அதிகாரி ஸ்ரீதர், பர்லியார் பகுதியில் சாலையின் அகலம் மற்றும் மண் உறுதித் தன்மை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகள் குழுவினருடன் அளவீடு செய்து சாலையின் நிலையைப் பரிசீலித்த அவர், மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புச் சுவர் அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தற்போதைய சூழலில் மேலும் மண் சரிந்து சாலையை முடக்கும் அபாயம் நிலவுவதால், தடுப்புச் சுவர் விரைவில் கட்டப்பட வேண்டும். தடுப்புச் சுவர் கட்டும் பணிகளின் போது போக்குவரத்து நெரிசல் மற்றும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், தடுப்புச் சுவர் கட்டி முடிக்கப்படும் வரை வாகனங்களை இயக்காமல் இருப்பது பணிகளை விரைந்து முடிக்க உதவும்.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தற்போது சாலையைத் திறப்பது குறித்து கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களே இறுதி முடிவு எடுப்பார்கள். மழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்தச் சாலையை எளிதாகத் திறந்து விட்டால் மீண்டும் மண் சரிந்து கீழே விழும் அபாயம் உள்ளது என தெரிவித்தார்.
