கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில், மையத் தடுப்புகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தேங்கிய மண்ணை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த இரு நாட்களில் (நவ 23, 24), 176 கி.மீ., துாரத்துக்கு துாய்மைப் பணி மேற்கொண்டு, 95.2 டன் மண் அகற்றப்பட்டுள்ளது.
கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் காற்றின் காரணமாக, மையத் தடுப்புகளை ஒட்டிய பகுதிகளில் மண் குவிந்து வருகிறது. இதனால், காற்றில் மண் துாசி பரவி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனைத் தடுக்கும் வகையில், மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் இயந்திரங்கள் வாயிலாக மண் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த நவ., 23, 24 ஆகிய இரு நாட்களில் மேட்டுப்பாளையம் ரோடு, அவிநாசி ரோடு, மருதமலை ரோடு, தடாகம் ரோடு, போத்தனுார் சந்திப்பு, ஜி.டி.நாயுடு மேம்பாலம், சத்தி ரோடு, வெள்ளலுார் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இப்பணி நடந்தது.
இதில், கிழக்கு மண்டலத்தில் 36 கி.மீ., துாரத்துக்கு 31 டன், மேற்கு மண்டலத்தில் 32 கி.மீ., துாரத்துக்கு 8.5 டன், வடக்கு மண்டலத்தில் 16 கி.மீ., துாரத்துக்கு 16.2 டன், தெற்கு மண்டலத்தில் 11 கி.மீ., துாரத்துக்கு 11 டன், மத்திய மண்டலத்தில் 81 கி.மீ., துாரத்துக்கு 28.5 டன் மண் அகற்றப்பட்டுள்ளது.
மொத்தம் 176 கி.மீ., துாரத்துக்கு இயந்திரங்கள் மூலம் 95.2 டன் மண் அகற்றப்பட்டு, சாலைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
சாலைகளில் மண் தேங்குவதை தொடர்ந்து கண்காணித்து, தேவையான இடங்களில் உடனுக்குடன் அகற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகரை துாய்மையாக பராமரிக்கும் வகையில் இப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என, மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.
