தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்துக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தீபாவளி பண்டிகையின்போது அரிசி விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதுடன், வரும் மாதங்களில் விலை சரியக்கூடும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்குவங்கம், பீஹார், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை எட்டாததால், பல மாவட்டங்களில் சாகுபடி பரப்பு குறைந்தது. இருப்பினும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நிலத்தடி நீர் மற்றும் ஆற்றுப்பாசனத்தைப் பயன்படுத்தி தாமதமாக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
உற்பத்தி பாதிப்பால் தமிழகத்தில் அரிசி விலை கணிசமாக உயர்ந்தது. கடந்த ஜூன் மாதத்தில் 26 கிலோ எடை கொண்ட சன்ன ரக பொன்னி புழுங்கல் அரிசி மூட்டை ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜூலையில் ரூ.1,600 ஆகவும், ஆகஸ்ட்டில் ரூ.1,800 ஆகவும் விலை உயர்ந்தது. செப்டம்பரில் ரூ.1,900 முதல் ரூ.2,100 வரை விற்பனையான நிலையில், நடப்பு மாதத்தில் மூட்டை ரூ.2,300 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அரிசி ஆலைகள் அதிகம் உள்ள திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன.
சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கான அரிசி தேவையைப் பூர்த்தி செய்யும் செங்குன்றம் சந்தைக்கும் நெல் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து 220-க்கும் மேற்பட்ட லாரிகளில் நெல் மூட்டைகள் வந்தடைந்தன.
இந்த வரத்து அதிகரிப்பு காரணமாக, தீபாவளி பண்டிகையையொட்டி அரிசி விலை மேலும் உயர வாய்ப்பில்லை என வியாபாரிகள் கருதுகின்றனர். மேலும், சந்தைக்கு நெல் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், வரும் மாதங்களில் அரிசி விலை குறையவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
