சமுதாய ஏற்றத்தாழ்வுகள் போல பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நம்முடைய நாட்டில் அதிகரித்து வருகிறது . 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழக்கூடிய நமது நாட்டில் வலிமை கொண்ட 10% பேர் இந்த நாட்டின் உடைய 80 % வளத்தை கட்டுப்படுத்தக்கூடியவர்களாக உள்ளனர். இதை மாற்ற வேண்டுமானால் அடிப்படையாக கல்வியை மக்களுக்குக் கொடுத்து ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியாக வேண்டும், என வி.ஐ.டி.பல்கலை வேந்தர் விஸ்வநாதன், கோவையில் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றினார்.
உலக தமிழர்களை ஒருங்கிணைக்கவும், உலகம் முழுவதும் தமிழை வளர்க்கவும், தமிழர் நலன் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், வி.ஐ.டி. பல்கலையின் வேந்தர் விஸ்வநாதனால் உருவாக்கப்பட்ட ‘தமிழியக்கம்’ கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில், செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
வி.ஐ.டி. பல்கலையின் வேந்தர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்விற்கு கல்லூரியின் செயலர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். தமிழியக்கம் தமிழ் ஆளுமையை வளர்க்கவும், படைப்பாற்றலைத் தமிழில் வெளிப்படுத்தவும் ஒரு சிறந்த மேடையாக அமையும். கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி மற்றும் விவாதங்கள் மூலமாக தமிழில் சிறந்து விளங்க வேண்டும் என மாணவ, மாணவிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
உலகத்தில் 7,000-க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கலாம். ஆனால், தோன்றிய காலம் தொட்டு இன்று வரை அழியாமல், சிதையாமல், இளமை மாறாமல் வாழும் செம்மொழி தமிழ் மொழி. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் பிற மொழிகளை கற்பதும் பேசுவதும் அவசியம். உலகத்தோடு தொடர்பு கொள்ள அது நமக்குத் தேவை. ஆனால், பிற மொழி கலப்பு என்ற பெயரில் தாய் மொழியினுடைய தூய்மையை நாம் இழந்து வருகிறோம். இதை மாற்றி, பிற மொழி கலக்காமல் தூய தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் ஒரு பெருமையாக மாணவர்கள் கருத வேண்டும், என பேசினார்.
அதை தொடர்ந்து பி.எஸ்.ஜி நிறுவனம் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றியும் அவர் விவரித்தார். இந்தியாவின் சுதந்திரத்திற்க்கு முன்பே சர்வஜன பள்ளி துணிவுடன் தாய்மொழியில் அறிவியலை பயிற்றுவிக்கும் முறையை 9ம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது என்பதை பகிர்ந்த அவர், சர்வஜன பள்ளி காட்டிய வழியை தமிழ்நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தி, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது பற்றியும் கூறினார்.
நிகழ்வில் வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன் பேசுகையில்:-
ஒரு மாநிலத்திலோ, நாட்டிலோ 18 வயதிலிருந்து 23 வயது வரை எத்தனை பேருக்கு உயர்கல்வி கிடைத்தது என்பதை வைத்து ஜி.இ.ஆர். எனும் மதிப்பீடு அளவிடப்படும். இது வளர்ந்த நாடுகளில் 60% முதல்100 % வரை இருக்கிறது. நாம் இப்போதுதான் 30% எட்டியிருக்கிறோம்.
நமது நாட்டின் ஜி.இ.ஆர். சராசரியை விட தமிழ்நாட்டின் ஜி.இ.ஆர். அதிகமாக உள்ளது. நாம் கல்வியில் வளர்ந்த ஒரு மாநிலம். ஏற்கனவே 50% தாண்டி உள்ளோம் என்றாலும் இது போதாது, நாம் இன்னும் கல்வியிலே வளர வேண்டும்.
பல்வேறு நாடுகளில் உயர் கல்வி வரை இலவசமாக கற்கமுடிகிறது. ஆனால் நம்முடைய நாட்டில் பெற்றோர்களை நம்பியே மாணவர்களின் உயர்கல்வி இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும். இதற்கான பொறுப்பை அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவும் குறிப்பாக நடுத்தர மக்களையும், ஏழை மக்களையும், அந்த குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு கல்வியை கொடுப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கல்வி கற்று அறிவை வளர்த்துகொண்டோருக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள் வாய்ப்பு இந்தியாவில் மட்டுமே முடிவதில்லை, உலகின் பல நாடுகளில் திறமையான மனித வளம் குறைந்து வருவதால் அங்கெல்லாம் பணிசெய்ய அறிவார்ந்தோர் தேவை படுகின்றனர். அந்த வாய்ப்பை நிரப்ப நாம் இங்கிருந்து நமது இளைஞர்களை அனுப்புவோம்.
4 ட்ரில்லியன்+ டாலர்களுடன் இந்தியா உலகின் 6வது பெரும் பொருளாதார நாடாக இருக்கிறது. ஆனால் தனிநபர் வருமானத்தில் 148 வது இடத்தில் இருக்கிறோம். 1990ம் ஆண்டு வரை சீனாவும் நாமும் ஒரே இடத்தில் இருந்தோம். இன்று அவர்கள் பொருளாதாரத்தில் 20 ட்ரில்லியன் டாலர்களுடன் உலகத்தின் இரண்டாவது இடத்திற்கு சென்று விட்டனர். தனிநபர் வருமானத்தில் அவர்கள் 14,000 டாலரை தாண்டி விட்டார்கள். நாம் 3,000 டாலரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
இவ்வளவு பெரிய மாறுபாடு நிகழ ஒரு காரணம், அவர்கள் அதிகமாக கல்விக்கு நிதி ஒதுக்கி கல்வியைக் கொடுத்தது தான். எனவே ஒரு அரசு வளர வேண்டுமானால், மக்கள் வளர வேண்டுமானால் கல்வி இருந்தால்தான் அது சாத்தியம்.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கல்லூரியின் மாணவர் மன்ற முதன்மையர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். தமிழ் இயக்கத்தின் செயலாளர் சுகுமார் துவக்க உரை வழங்கினார். தமிழ் இயக்கத்தின் பொதுச்செயலாளர் அப்துல் காதர் வாழ்த்துரை வழங்க, நிறைவாக தமிழ் மன்ற ஆசிரிய ஆலோசகர் முருகேசன் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்வில் மாநில அளவில் தமிழ் இயக்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
