கோவை பீளமேடு பகுதியில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பயின்று வந்த 16 வயது மாணவன் சாதி ரீதியாக விமர்சனம் செய்யப்பட்டதால் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாகவும், குற்றவாளிகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்குள் கோவை மாநகர காவல் ஆணையர் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் பின்வருமாறு :-

பாரதி காலனியைச் சேர்ந்த அசோக்குமார் – கெளசல்யாதேவி தம்பதியின் 16 வயது மகன் அகிலன். அகிலனின் தந்தை கேரளாவில் உள்ள ஒரு விடுதியில் வேலை செய்து வரும் நிலையில், தாய் பாரதி காலனி பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, உதவித்தொகை பெறுவதற்காக வகுப்பறையில் இருந்த பட்டியல் இன மாணவர்களை ஆசிரியர் விஜயகுமார் எழுந்து நிற்க வைத்துள்ளார். அப்போது, மாட்டுக்கறி சாப்பிடும் மாணவர்கள் யார் என்றும் அவர் கேட்டுள்ளார். அதில் அகிலன் உட்பட 5 மாணவர்கள் எழுந்து நின்றனர். அன்றிலிருந்து வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்கள், அகிலனின் சாதி மற்றும் உணவுப் பழக்கத்தைக் குறிப்பிட்டு அவரைத் தொடர்ந்து கேலி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி ஆசிரியர் விஜயகுமாரிடமும், பள்ளித் தலைமை ஆசிரியர் அருண்குமாரிடமும் அகிலன் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் மனஉளைச்சலுக்கு ஆளான அகிலன் நேற்று பள்ளிக்கு செல்வதாகக் கூறிவிட்டு மதியம் தனது உயிரை .மாய்த்துக்கொண்டுள்ளார்.
studentss scaled

அவரின் தாய் வேலை முடிந்து மதியம் 1 மணியளவில் வீட்டிற்கு வந்த போது சடலமாக இருந்த தனது மகனை கண்டு, பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த புகாரை போலீசார் விசாரித்து வருகின்றனர். வியாழன் அன்று அவர்கள் ஆசிரியர் விஜயகுமாரை கைது செய்தனர். தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் இரண்டு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் (ரம்யா பாரதி ஐ.பி.எஸ்.) இதுபற்றிய அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தரப்பில் அறிவுறுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினர்/உறவினர்கள் பீளமேடு காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.