கோவை செம்ம்மொழிப் பூங்கா வளாகத்தில், பொதுமக்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க வசதிகளை ஏற்படுத்த தொடர்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

சமீபத்தில் செம்மொழிப்பூங்கா வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், அந்த வளாகத்தில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து செம்மொழிப் பூங்கா வளாகத்தில், பொதுமக்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில், புகார் பெட்டி வைக்கவும் மற்றும் டிஜிட்டல் முறையில் கியூ.ஆர். கோட் மூலம் புகார்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அதிகாரிகளிடம் கூறினார்.

மேலும் அங்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் (RO Plant) சுத்திகரிப்பினை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துக்கொள்ளுமாறும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அங்கு அவர் ஆய்வு மேற்கொண்ட போது, அவ்வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள உள்உடற்பயிற்சி கூடத்தினை ஆய்வு மேற்கொண்டு, அங்கே பழுதடைந்த உடற்பயிற்சிக்கான உபகரணங்களை மாற்றியமைக்கவும், தேவையான உபகரணங்களை புதிதாக வாங்கவும் அறிவுறுத்தினார்.