வடகோவையில் இருந்து திருவேங்கடசாமி சாலை (கிழக்கு) செல்லும் வழியில் உள்ள பிரதான சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள 4 ‘ட்ராபிக் சிக்னல்’ அடிக்கடி செயல்படாமல் போகிறது.
நேற்று மாலை இந்த சிக்னல்கள் முழுவதுமாக இயங்காமல் போனதால், அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். இந்த வழியை பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பயன்படுத்துகின்றன.
நேற்று ஞாயிறு என்பதால் வாகன போக்குவரத்துக்கு சற்று கூடுதலாகவே இருந்தது. அருகே உள்ள மாலுக்கு செல்பவர்களின் பலரும் இந்த பாதையை பயன்படுத்தினர்.
அங்கிருந்த 4 ‘ட்ராபிக் சிக்னல்’ களும் இயங்காததால், வாகன ஓட்டிகள் தாங்களாகவே போக்குவரத்தை கவனித்து செல்லவேண்டிய நிலை இருந்தது.
பரபரப்பான சாலைகளில் வாகனங்கள் இயங்கும்போது பாதுகாப்பாக சாலையை பயன்படுத்த சிக்னல் முறையைத்தான் மக்கள் விரும்புகின்றனர். இருந்தபோதிலும் ஏற்கனவே கோவை மாநகரின் பல இடங்களில் சிக்னல் முறைக்கு “நன்றி வணக்கம்” சொல்லிவிட்டு வேறு மாற்றுமுறைகளை கொண்டுவந்துள்ளனர் அதிகாரிகள்.
இந்த நிலையில் இருக்கும் சிக்னல்களையாவது முறையாக பராமரிக்கலாமே என்கின்றனர் நேற்று இந்த சிக்னல் சிக்கலில் சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்.

